Wednesday, April 15, 2020

விண்டர் விநோதங்கள்: ஐஸ் சிற்பங்கள்


பனிக்காலத்தில் வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் மிக முக்கியமானது ஐஸ் சிற்பங்கள் கண்காட்சி. குளிர்காலத்தில் பிப்ரவரி மாதம் மிக முக்கியமானது, ஏனென்றால் பனியின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உறை மழை பெய்யும் (ஆங்கிலத்தில் Freezing rain). மரம் ,செடி,கொடி ரோடுகள் அனைத்தும் உறைந்து போயிருக்கும். 

ஐஸ் சிற்பங்களை மனிதன் உருவாக்குவதை விட இயற்கை உருவாக்குவது மிக சிறப்பாக இருக்கும் . அனைத்து​ மரம் மற்றும் செடிகளில் ஐஸ் முழுவதுமாக படிந்து பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். (கீழே படம் உள்ளது)


மனிதனும் தன் பங்கிற்கு ஸ்நொவ் மேன் (Snow man) சிற்பத்தை வீட்டிற்கு அருகாமையிலோ அல்லது பூங்காக்களிலோ உருவாக்குவார்கள். நம்மூரில் குழந்தைகளுக்கு மண்ணில் விளையாடப் பிடிக்கும் , வெளிநாட்டு குழந்தைகளுக்கு snowல் விளையாடுவது மிக மிக பிடித்தமான ஒன்று. 
Ice Hotel


தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு ஐஸ் சிற்பங்கள் மிகப்பெரும் கலையாக மாறிவிட்டது. தற்போது நடக்கும் ஐஸ் சிற்ப கண்காட்சியில் அனைத்து விதமான விலங்குகள் , கார்ட்டூன் கதாபாத்திரங்கள் என்று பல்வேறு வகையான சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் . குளிரினால் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது போன்ற சிற்ப கண்காட்சி சிறந்த பொழுது போக்கு இடமாக இருக்கும்.


ஐஸ் சிற்பத்தின் அடுத்த கட்டம் என்பது ஐஸ் ஹோட்டல் , முழுக்க முழுக்க முழுக்க பனியினால் உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டல் வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் மிக மிக அழகாக காட்சி அளிக்கும். ஐஸ் ஹோட்டலில் மக்கள் தங்குவதற்கான அறைகள், பார் வசதி ,வெந்நீர் ஊற்று என்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

விண்டரில் மக்களை மகிழ்விக்க இது போன்ற பொழுதுபோக்குகளை அரசாங்கமும் ,தன்னார்வ நிறுவனங்களும் ஊக்குவிக்கினறன.

செங்கதிரோன்

விண்டர் விளையாட்டுகள்:


னிக்காலம் முழுதும் கருங் கரடி மற்றும் கறுப்புக்கரடி (இங்கே குறிப்பிடுவது Polar கரடி அல்ல) ஆகியவை நீண்ட தூக்க நிலைக்கு சென்று விடும். இந்த நீணட தூக்கத்தினால் அதன் உடல்நலன் பாதிக்கமால் இருப்பதற்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும் ஆற்றலினை இயற்கை கரடிகளுக்கு அளித்திருக்கின்றது. கரடியும் எப்பொழுது விண்டர் முடியும் சால்மன் மீன்கள், தேனடை போன்றவற்றை எப்படி வேட்டையாடி உண்பது என்பனை கனவுகண்டு கொண்டே தூங்கிக்கொண்டிருக்கும்.
கரடி வாழும் வாழ்வினை மனிதன் வாழமுடியாது . இயங்கிக்கொண்டே இருந்தால் தான் பிழைக்க முடியும். அதற்காக தான் குளிர்பிரதேசங்களில் வாழ்பவர்கள் விண்டர் விளையாட்டுக்களை வடிவமைத்தார்கள். விண்டர் விளையாட்டுகளின் எண்ணிக்கை ஏராளம் . இவைகளின் சிறப்பு கருதியே விண்டர் ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுகின்றது. 

விண்டர் விளையாட்டுகளை மிதமான மற்றும் தீவிரமான விளையட்டுகள்(வீர விளையாட்டுகள்) என்று இரண்டு விதமாக தரம் பிரிக்கலாம்.
மிதமான விளையட்டுகளில் ஐஸ் ஸ்கேட்டிங் பிரதானமானது , ஏனென்றால் இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக இந்த விளையாட்டில் ஈடுபடுவார்கள். நியூயார்க் போன்ற பெருநகரம் தொடங்கி சிற்றூர் வரை நகரத்தின் மத்தியில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக குளிர்காலங்களில் மட்டும் இந்த ஸ்கெட்டிங் மைதானம் அமைக்கப்பட்டிருக்கும். வார விடுமுறை நாட்களில் இந்த இடம் களைகட்டும் . ஏகப்பட்ட மக்கள் உற்சாகமாக ஸ்கெட்டிங் செய்வதைப் பார்க்க முடியும். இது ஒரு romanitc விளையாட்டு என்று கூட சொல்லலாம். ஆண் பெண் இருவரும் இணைந்து கைகோர்த்துக்கொண்டு ஸ்கெட்டிங் செய்வர்.இது பற்றி இன்னும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் blades of glory படம் பாருங்கள். 

குழந்தைகளுக்கான விண்டர் விளையட்டுகளில் முக்கியமானது Tubing (பெரியவர்களும் பங்கேற்கலாம்). பெரிய டயர் போன்ற ஒன்றின் நடுவே ஒருவர் அல்லது இருவர் உட்கார்ந்து கொண்டு செங்குத்தான மலை போன்ற ​ போன்ற பகுதியில் இருந்து சறுக்கி விளையாடுவார்கள் . முதன் முதலாக இதனை விளையாடியபோது படு த்ரில்லிங்காக இருந்தது.

அடுத்தது Dog sleeding,இந்த அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட நாய்களை கயிற்றினால் பிணைத்து அதன் துணையுடன் நீண்ட நேரம் பயணிப்பது. இது பலகாலமாக பயன்பாட்டில் இருந்துவந்த ஒன்று. snowmobile போன்ற இயந்திர வாகனங்கள் வந்த பிறகு இதன் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்டது . அதனாலேயே இது விண்டர் விளையட்டுகளில் ஒன்றாக மாறிவிட்டது. Dog sleeding போட்டிகளும் நடக்கும். விண்டர் விளையட்டுகளில் இதற்கு முக்கிய இடமுண்டு. Eight below என்ற ஆங்கில திரைப்படத்தில்Dog sleed குறித்து அருமையாக விவரித்திருப்பார்கள். 

வீர விளையாட்டுகள் குறித்து பார்ப்போம்:
Ski: ஸ்கி என்பது பனி சூழ்ந்த மலைபபகுதியில் கால்களில் பட்டை, கைகளில் குச்சி ஆகியவற்றின் துணையோடு சறுக்கி விளையாடுதல் .விண்டரின் மிகுந்த சவாலான விளையாட்டுகளில் இது முக்கியமான ஒன்று . ஏனென்றால் இந்த விளையாட்டில் ஏகப்பட்ட விபத்துகள் நடந்தேறியிருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஒன்று , உலகின் புகழ்பெற்ற கார் விளையாட்டு வீரர் மைக்கேல் ஷூமேக்கர் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஸ்கி விளையாடும்போது மரத்தில் அவர் தலை மோதி கோமா நிலைக்கு சென்றார். வெளிநாட்டில் அலுவலகங்களில் வரவிடுமுறை முடிந்துவரும்பபோது யாராவது ஒருவர் தத்தி தத்தி நடந்து வந்தால் ஸ்கி அல்லது ஸ்நொவ் போர்ட் விளையாட்டில் காயம் ஏற்பட்டது என்று புரிந்து கொள்ளலாம். இளங்கன்று பயமறியாது என்பதால் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு இந்த ஸ்கி மற்றும் ஸ்நொவ் போர்டு (Snow Board ).


ஐஸ் ஹாக்கி : விண்டர் விளையட்டுகளிலேயே உலகம் முழுதும் பிரபலமான விளையாட்டு ஐஸ் ஹாக்கி. நம்மூரில் ஹாக்கி என்பது மட்டையின் உதவியுடன் பந்தின் தள்ளி கோல் போடுவது. ஐஸ் ஹாக்கி என்பது பனியால் ஆன தரையில் ஸ்கெட்டிங் செய்து கொண்டே பந்தினை (இந்த பந்து தட்டையாக கேரம் போர்டு காயின் போன்று இருக்கும்) கோல் போடுவது. மைதானத்தின் அளவு மிக சிறிதாக இருக்கும். நம்மூர் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் போல கனடாவில் ஹாக்கி வீரர்களுக்கு அதிக சம்பளம் , புகழ் ,மதிப்பு எல்லாம் உண்டு. 

வை தவிர பனி மலையேற்றம் , விண்டர் ட்ரெக்கிங் ஆகியவைகளும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்துக்கு ஆல்பஸ் மலையேற்றத்திற்காக கனடாவில் இருந்து என் நண்பர்கள் செல்வதுண்டு. அதே போல snowmobile வாகனத்தில் காட்டில் பயணம் செய்து வேட்டையாடுவதும் நடக்கும்.

விண்டரின் போது எல்லா நேரமும் வீட்டிலேயே முடங்கி கிடைக்காமல் நம் உடலையும் மனதையும் உற்சாகப்படுத்த இது போன்ற விளையாட்டுகள் அத்தியாவசிய ஒன்றாக இருக்கிறது. 

செங்கதிரோன்

விண்டர் விநோதங்கள் : குளிர் தேன்


உண்மையான கனடியன் (Canadaian) என்பவன் மாபிள் சிரப்பினை உணவில் சேர்த்துக்கொள்வதோடு மட்டுமன்றி , மாபிள் சிரப்பினை எவ்வாறு அந்த மரத்தில் இருந்து எடுப்பது என்பதனையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும் . இதனை சொல்வது கனடாவில் வாழும் பூர்வீக மக்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாபிள் சிரப் குறித்த சிறு அறிமுகம்.

கனடா நாட்டுக் கொடியில் இருக்கும் இலையின் பெயர் மாபிள் (Maple ). கனடா முழுதும் அதிகம் தென்படும் இந்த மரங்களில் இருந்து எடுக்கப்படும் திரவத்திற்கு பெயர் தான் மாபிள் சிரப் . குளிர்காலத்தில் மரத்தின் தண்டுகளில் சேமித்து வைக்கபட்ட ஸ்டார்ச் , வசந்த காலத்தின் தொடக்கத்தில் தேன் போன்றதொரு திரவமாக மாறி இருக்கும் . மரத்தில் துளையிட்டு இந்த தேனினை எடுப்பார்கள். மிகுந்த குளிரின் காரணமாக உறைந்த நிலையில் இருக்கும் இந்த திரவத்தினை , கொதிக்க வைத்து திரவமாக மாற்றுவார்கள். நம்மூரில் உருவாக்கப்படும் கரும்பு மற்றும் பனை வெல்லம் தயாரிப்புக்கு முறைக்கு இணையாக கூட இதனை ஒப்பிடலாம்.

விவசாயம் செய்வது என்பது குளிர்காலங்களில் மிக மிக சாத்தியமற்ற ஒன்று . இருப்பினும் குளிர் முடியும் தருவாயில் ( வசந்தகாலத்தின் தொடக்கத்தில் -Early spring ) விவசாயம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் பலவும் நடக்கும் . அவற்றில் முக்கியமானது தேன் எடுத்தல்.

வடஅமெரிக்க (கனடா, அமெரிக்கா) பூர்விககுடிமக்கள் தான் முதன் முதலில் இந்த தேன் எடுக்கும் முறையினை கண்டுபிடித்தனர். பிறகு கனடாவில் குடியேறிய ஐரோப்பாவினரும் இந்த தேன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.


கனடாவில் உள்ள கியூபெக் மாநிலம் தான் மிக அதிக அளவிலான மாபிள் சிரப்பினை உற்பத்தி செய்கின்றது . பிரஞ்சு மொழியில் மாபிள் தேன் தயாரிக்கும் தொழிற்கூடங்களுக்கு கபானா சுக் (cabane a suc) என்று பெயர் . வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் இடமாக இந்த தேன் எடுக்கும் மையங்கள் இருக்கும்.

மிக மிக இனிப்பு சுவையாக இது இருந்தாலும் அனைத்து வகையான உணவுகளிலும் மாபிள் சிரப்பினை சிறிதளவாவது சேர்த்து உண்பார்கள்.

கனடாவுக்கு வர விருப்பமுள்ளவர்கள் இப்பொழுதே மாபிள் சிரப்பினை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் .
செங்கதிரோன்

ரச" வாதம்:


கொரோனா வைரஸ் ஏற்படுவதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பலவேறு வழிமுறைகளை அரசும் , மருத்துவத்துறையினை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த அறிவுறுத்தல்களுக்கிடையே ஒரு சிலர் இடைச்செருகலாக தங்கள் வன்மத்தினையும் வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது. சைவ உணவு உண்பவர்கள் மாமிச உணவுக்கு எதிராக ஏற்படுத்தும் பீதிகள் , சீன மக்களின் உணவுப் பழக்கம் குறித்த கிண்டல்கள் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இந்தப் பட்டியலில் ரசத்தையும் இணைத்து , ரசம் சாப்பிடாதீங்க அது ஒரு மூட நம்பிக்கை என்று சொல்வதைப்பார்த்தால் சிரிப்பு தான் வருகின்றது. 

உணவில் பூண்டு , மிளகு, மஞ்சள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனப்து அனைவரும் அறிந்த உண்மை . அதனாலேயே ரசம் சாப்பிட சொல்லி பலரும் பரிந்துரைக்கின்றனர் . தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநிலத்தவரும் ரசத்தின் அருமை பெருமைகள் குறித்து கூறுவதை கேட்டிருக்கின்றேன். இவ்வளவு பெருமை வாய்ந்த. ரசத்தினை சாப்பிடுவதைக் கூட எதிர்க்கும் அளவுக்கு ஒரு சில மருத்துவர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

கடந்த ஆண்டு நிலவேம்புக் குடிநீரின் நம்பகத்தன்மை குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டமருத்துவர் அமலோற்பவநாதன்  தன் மனைவிக்கு ஏற்பட்ட டெங்கு காய்ச்சலுக்கு ரசம் மட்டுமே சாப்பிட்டு சரியானதாக குறிப்பிட்டார்.

டெங்குக்கு ரசம் போதும் என்றவர்கள் , கொரோனாவுக்கு ரசமா அதெல்லாம் நம்பாதீர்கள் என்கிறார்கள். இப்பொழுது புரிகிறதா இவர்களின்இரட்டை நிலை . நிலவேம்புக் குடிநீரினை பரிந்துரைத்தால் , அதெல்லாம் தேவையில்லை ரசம் மட்டும் போதும் என்பார்கள். ரசம் சாப்பிட சொன்னால் அதெல்லாம் தேவையில்லை வெந்நீர் மட்டும் குடியுங்கள் என்பார்கள்.
தமிழகத்தில் அக்ஷ்யபாத்திர என்ற அமைப்பு அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்குகின்றது , அந்த அமைப்பு வழங்கும் உணவில் பூண்டு வெங்காயம் சேர்க்காதது குறித்து கேள்வி எழுப்பும் அதே ஆட்கள் தான் , மண்ணின் மருத்துவ பொக்கிஷம் குறித்த ஏளனங்களையும் செய்து தங்களை தாங்களே கலாய்த்து கொள்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து கூட தப்பித்து விடலாம் , ஆனால் தங்களை அதிபுத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டு மக்களின் அன்றாட உணவுப்பழக்கங்கள் குறித்து பீதியைக் கிளப்பும் ஆட்களிடமிருந்து தப்பிப்பது மிக மிக கடினம்.
செங்கதிரோன்

விண்டர் விநோதங்கள் : பனி வெள்ளம்


பனிப்பொழியும் (Snowfall) போது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாலும் இந்த பனிப்பொழிவினால் பல்வேறு தொல்லைகள் உண்டாகும் . சாலையில் நடக்கவோ ,வாகனங்களை ஓட்டவோ முடியாது. இந்த விண்டரின் ஆரமபம் முதல் முடியும் வரை பலவேறு விதமான இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். பிப்ரவரி மாதத்தில் ஏற்படும் குளிர்மழையினால் சாலைகள் கண்ணாடி போல மாறிவிடுவதால் நடப்பவர்கள் வழுக்கி விழுந்து கை ,கால் முறிவு ஏற்படும் , வாகனங்கள் பிரேக்குக்கு கட்டுப்படாமல் கண்ணாடி சாலையில் வழுக்கி மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துகள் உண்டாகும். (கண்ணாடி சாலைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள-லிங்க் கமெண்ட் பகுதியில் )

பனி வெள்ளம் என்பது விண்டர் முடியும் தருவாயில் ஆறுகளை ஒட்டிய இடங்களில் ஏற்படும் . ஆங்கிலத்தில் இதற்கு freshet என்று பெயர். வசந்த காலத்தின் தொடக்கத்தில் வழக்கமாக இந்த பனி வெள்ளம் உண்டாகும் . மூன்றுமாதங்களுக்கு மேலாக பெய்த பனிபொழிவினால் ஆங்காங்கே பல்வேறு தற்காலிக பனி மலைகள் அல்லது மேடுகள் உருவாகி இருக்கும். வின்டரின் முடிவில் வெப்பநிலை உயரும் போது இந்த பனிமலைகள் உருக ஆரம்பிக்கும்.

வின்டரில் வெப்பநிலை மிக மிக குறைவாக -20க்கும் கீழ் செல்வதால் ஆறு குளம் ஏரி ஆகியவையும் உறைந்து விடும் .ஏசு கிறிஸ்து கடலில் நடந்து அற்புதம் செய்ததை போல , வின்டரில் ஒரு சிலர் உறைந்த இந்த ஆறு ஏரிகளில் நடந்து அற்புதங்களை செய்வார்கள் . இந்த உறைந்து போன ஆறுகள் விண்டரின் முடிவில் அதாவது வசந்த காலத்தின் தொடக்கத்தில் வெப்பநிலை உயர்வால் உருக ஆரம்பிக்கும். மேற்சொன்ன தற்காலிக பனி மேடுகள் உருகுதல் , இந்த உறைந்து போன ஆறுகளின் உருகுதல் இரண்டும் இணைந்து தான் இந்த பனி வெள்ளம் உண்டாகும். ஏப்ரல் முதல் ஜுலை வரை இந்த பனிவெள்ளம் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏற்படும்.

இந்த பனி வெள்ளமானது ஆறுகளின் அருகாமையில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் நுழைந்து சேதங்களை உண்டாக்கும். ஒவ்வொரு வருடமும் கனடா மற்றும் அமெரிக்க அரசுகள் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் இந்த வருடமும் நான் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் பனி வெள்ளம் ஏற்பட்டு ஒரு சில கிராமங்கள் பாதிப்படைந்தன.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப பனி பொழிவு பார்ப்பதற்கு தான் சாதுவாக இருக்கும் ஆனால் அதனால் ஏற்படும் தொல்லைகள் அளவிட முடியாத ஒன்றாக இருக்கும்.

செங்கதிரோன்