Monday, June 1, 2015

மாஸ் -முதலுக்கு மோசமில்லை

 சூர்யா வெங்கட்பிரபு கூட்டணி என்றதும் எனக்கு  நினைவுக்கு வந்தது கலகலப்பு படத்தில் சந்தானம்-அஞ்சலி ஜோடி பொருத்தத்தை விமல் சர்க்கரைப் பொங்கலும் வடகறியும் போல என்பார். அதுதான் , ஏனென்றால் நந்தா படத்திற்குப் பின் வந்த அனைத்து  சூர்யாவின் படங்களில்  அவரின் கதாபாத்திரத்திற்கு ஒரு முதிர்ச்சி இருக்கும். வெங்கட்பிரபு படத்தில் சூர்யாவுக்கு அது போன்ற ஒரு பாத்திரம் இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.ஈழத்தமிழர்சூர்யா மட்டுமே நாம் இயல்பாக பார்க்கும் சூர்யவாகக் காட்சி அளிக்கின்றார். 

கதை ஓரளவு அபூர்வ சகோதரர்கள் படத்தின் தாக்கத்தில் உணடக்கப்பட்ட படம் போல உள்ளது. அ .சகோ. படத்தில் அண்ணன் தம்பி இங்கே அப்பா மகன், அதில் அண்ணன் எதிர்களை கொல்லும் சமயங்களில் தம்பி கமல் அந்த இடத்தில் இருப்பதால் அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார். இங்கே சற்று வித்தியாசமாக அப்பா சூர்யா மகனைப் பயன்படுத்தி எதிரிகளைக் கொல்கின்றார்.



ஸ்ரீமான் மற்றும் கருணாஸ் இருவரையும் இன்னும் அதிகமான காட்சிகளில் நடிக்க வைத்திருக்கலாம். முதன் முறையாக பிரேம்ஜிக்கு மக்கள் மனதில் ஆழமாகப் பதியும் கதாபாத்திரம், காமெடி சோகம் இரண்டிலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார்.பார்த்திபனை போலீஸ் உடையில் பார்க்கும் போது உள்ளே வெளியே படம் தான் ஞாபகம் வந்தது. அதில் நடித்த அதே பாணியை இதிலும் அவருக்கே தெரியாமல் பின்பற்றி இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். உள்ளே வெளியே இரண்டாம் பாகம் கூட எடுக்கலாம்.மிக நல்ல வரவேற்பு இருக்கும்.

நான் கண்டிப்பாக நயன்தாராவுக்காக இந்தப் படம் பார்க்கவில்லை என்பதனை பதிவு செய்ய விரும்புகின்றேன். ஏனென்றால் வழக்கமாக வெங்கட்  படத்தில் கதநாயகியை விட ஒரு பாடலுக்கு ஆடும் நடிகைகள் மிக அழகாக இருப்பார்கள், அப்படி ஏதாவது இருக்கும் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. நயன்தாராவை கூட வரும் பெண் அக்கா என்று கூப்பிட்டது தான் நயன்தாராவின் முன்னாள் ரசிகன் என்ற முறையில் சற்று வருத்தமாக இருந்தது.பிரனிதா பற்றி சிலாகித்து சொல்ல ஒன்றுமில்லை. 

சமுத்திரக்கனி வில்லன் பாத்திரத்திற்கு கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கின்ரார். ஈழத்தமிழர் சூர்யா பகுதியினை மட்டும் முதல் பகுதியிலே காட்டி இருந்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.ஜெயப்பிரகாஷ் இந்தப் படத்திற்கு தேவையே இல்லை.

அனைவரும் பாராட்டியது போல படத்தில்  ஜெய் வரும் பகுதி மிக நெகிழ்வாக இருந்தது.பேயாக உளவும் மற்றவர்களை ஒரே பாட்டில் அவர்களின் கதை சொல்லி முடித்ததற்குப் பதில் கொஞ்சம் விரிவாகக் காண்பித்திருக்கலாம் .


மொத்தத்தில் அஞ்சான் அளவுக்கு மோசமில்லை. இந்த மாறுபட்ட இருவரின் கூட்டணியில் நமக்கு இவ்வளவு தான் கிடைக்கும்.சூர்யா கதைத் தேர்வில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சூர்யாவுக்கு மற்ற நடிகர்களை விட குடுமப் audience அதிகம் , இதனை அமீர் ஒரு பேட்டியில்  சொல்லி இருக்கின்றார். அது போன்ற ரசிகர்களை இழக்காத அளவுக்கு அவரின் படங்கள் இருக்க வேண்டும்.
மாஸ் நீங்கள் கொடுக்கும் டிக்கெட் விலைக்கு மோசமில்லை.


பி.கு. வெங்கட் பிரபுவும் சூர்யாவும் பால்ய காலத்திலிருந்தே தோழர்களாம் , அந்த நட்பின் அடிப்படையில் தான் இந்தப் படத்தில் இணைந்திருக்கின்றனர்.
நன்றி