Thursday, January 7, 2016

அக்கா தங்கையோடு பிறந்தவனும் பிறக்காதவனும்:

ஆகச்சிறந்த வசவு சொல்லான நீயெல்லாம அக்கா தங்கச்சிக் கூட பொறக்கலையா என்பதன் பின்னணியை சற்று நிகழ் காலத்தோடு பொறுத்திப் பார்க்கும் பதிவுதான் இது . அக்கா  தங்கையோடு பிறந்தவர்களுக்கு அவர்களின் அருமையும் தெரியும் அவர்களால் ஏற்படும் இன்னல்களும் தெரியும். மாறாக அக்கா தங்கை இல்லாத ஆண்களுக்கு பெண்கள் என்பது ஒரு கற்பனையான உருவமாகவே இருக்கும். தங்கள் அம்மா போல தான் அனைத்துப் பெண்களும் இருப்பார்கள் என்ற அறியாமையிலே இருப்பார்கள்

வீட்டில் சகோதரிகளுடன் வளர்ந்த ஆண்கள் பெண்களின் குணத்தினை இயன்றவரை புரிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் பேசுகையில் எது நிஜம் எது உண்மை என்பதனை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அதே போல அவர்களின் துன்பங்களில் துயரப்படும்போது உடன் பிறந்த சகோதரர்கள்  துவண்டு விடுவார்கள்.தன் சகோதரி திருமணமாகி சென்ற பின்னர் அந்த வீட்டில் இருக்கும் அப்பா அண்ணன் தம்பி ஆகியோர் முதல் முறையாக ரகசியமாகக் கண்ணிர் சிந்துவார்கள். இதற்கு முன்பு தன் சகோதரியின் நலன் குறித்து அக்கறை இல்லாதது போல் இருக்கும் சகோதரன், திருமணமாகி சென்ற தன் சகோதரியை தினமும் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பான்.தன் சகோதரியின் கணவனிடம் மேலதிகாரியிடம் எப்படி பணிவாக நடந்து கொள்வானோ அதை  விட அதிகமாக பணிவுடன் நடந்து கொள்வான்.


அக்காவுக்கும் தங்கைக்கும் என்ன வேறுபாடு அக்கா நம் அம்மாவின் மறு வடிவம் , நம் தவறுகளைப் பொறுத்துக் கொண்டு பொறுமையாக அறிவுரை வழங்குபவள். தங்கை நம்மமுடைய மனசாட்சி போல நம் தவறுகளை முகத்திற்கு நேராக சொல்லித் திருத்துப்பவள் , நம்முடைய குடும்பத்திற்குள்ளேயே இருக்கும் நம்முடைய மிக சிறந்த விமர்சகி.

தன் மனைவி மற்றும் தன் சகோதரிக்கு இடையில் நடக்கும் கருத்து மோதலில் இவன் மாட்டித் தவிக்கும் தவிப்பு இருக்கின்றதே அது தன் எதிரிக்குக் கூட வரக்கூடாது என நினைக்கும் அளவிற்கு இருக்கும். ஆனாலும் தன்  சகோதரியின் மகனையோ மகளையோ அவன் கொஞ்சும் பொது இந்த உலகையே மறந்து விடுவான் .திருமணமாகாத பெரும்பாலான ஆண்களின்  கைபேசி ,வாட்சப் , பேஸ்புக் போன்றவற்றில் சகோதரிகளின் குழந்தைகளின் படமே நிரம்பி இருக்கும்.  இதைப் போல பல்வேறு உணர்ச்சிகரமான நிகழ்வுகள் சகோதர சகோதரிகளின் பந்தத்தில் இருக்கின்றன.

சகோதரிகள் இல்லாத ஆண்களுக்குப் பெண்கள் என்றாலே மென்மையாக இருப்பார்கள் , சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து விடுவார்கள் , சமையல் ராணியாக இருப்பார்கள் இப்படி எண்ணற்ற கற்பனையுடன் இருப்பார்கள். பெண்களுடன் பழக ஆரம்பித்தப் பின்னர் இவை அனைத்தும் பொய் என்னும் போது கடுமையாக எதிர் வினை ஆற்றுவார்கள். தன் அம்மாவைப் பற்றிப் பேசி புளங்காகிதம் அடைவார்கள். அவர்கள் அதிக அதிர்ச்சி அடையம் நிகழ்வு பெண்களின் மாதவிடாய் குறித்து தான், அக்கா தங்கையோடு பிறந்தவர்களுக்கு மருந்துக் கடையில் கருப்பு பாலிதீன் பையில் நாப்கீன் வாங்கி வந்த அனுபவம் இருக்கும். ஆனால் சகோதரிகளுடன் பிறக்காதவர்களுக்கு இந்த செய்தியைக் கேள்விப் பட்டால் அப்படி அதிர்ச்சி அடைவார்கள். இன்றைய கால கட்டத்திலும்   பெரும்பாலான பெண்களுக்கு அப்பா தான் உள்ளாடைகளை  கடைக்கு சென்று வாங்கி வருவது வழக்கமாக இருக்கின்றது. இதையெல்லாம் மிக மிக ஆச்சர்யமடையும் செய்தியாக அக்கா தங்கையோடு பிறக்காதவர்களுக்கு இருக்கும்.

இந்தப் பதிவின் மூலம் அக்கா தங்கையுடன் பிறக்காதவர்களை குற்றமெல்லாம் சொல்லப் போவதில்லை. ஏனெனில் இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கையில் தங்கத் தட்டில் வைத்து தாங்குவது போல தாங்குவதையும் நான் கண்டிருக்கின்றேன்.

பொதுவாக அக்கா தங்கை என்பது நடிகர் பார்த்திபனின் படத் தலைப்பைப் போல அது ஒரு சுகமான சுமை . சுமந்தவர்களுக்கு மட்டுமே அதன் சுகம் தெரியும்.

இந்தப் பதிவினை தன் சகோதரனை எண்ணி ஏங்கும் சகோதரிகளுக்கும் , தன் அக்கா தங்கையின் அன்பை அவர்களின் திருமணத்திற்குப் பின் இழந்து தவிக்கும் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்கின்றேன்.
நன்றி 
செங்கதிரோன்