Wednesday, August 16, 2017

No.1. அல்லக்கை அல்வா வாசு :

அல்வா வாசு பலருக்கும் இந்த பெயரைக் கேட்டால் யாரென்று தெரியாது, ஆனால் பல படங்களில் நடித்துள்ளார். அவர் பெயர் தெரியாத அளவுக்கு இருந்ததற்கு முக்கியக் காரணம் மணிவண்ணன் மற்றும் வடிவேலு ஆகியோருக்கு அல்லக்கையாக மட்டுமே நடித்துள்ளார். மிக தனித்துவமான குரல் அமைப்பு கொண்டவராக இருந்தாலும் ஏனோ தனக்கான ஒரு தனியிடத்தினை நடிப்பில் நிகழ்த்தவில்லை. இதனால் தான் ஆடுகளம் படத்தில் சேவல் சண்டை நடக்கும்போது அங்கு அறிவிப்பாளராக இவரை வெற்றிமாறன் பயன்படுத்தியிருப்பார். 



நிஜத்தில் அல்லக்கையாக இருப்பதைக் காட்டிலும் சினிமாவில் அல்லக்கையாக நடிப்பது மிக சிரமம் . அதனை மிக மிக சரியாக நடித்தவர் அல்வா வாசு . குறிப்பாக வடிவேலுவுடன் நடித்த படங்களில் இங்கிலீஸ்காரன், ஜில்லுனு ஒரு காதல் , எல்லாம் அவன் செயல் என்ற படங்களில் இவரை மட்டும்  கவனித்துப் பாருங்கள் ஒரு தேர்ந்த அல்லக்கைக்கான அத்தனை குணாதிசியங்களுடன் நடித்திருப்பார் . அதே காட்சிகளில் நடித்த போண்டா மணி , தம்பி ராமையா போன்றவர்கள் கூட அந்தக் காட்சியோடு ஒட்டியும் ஒட்டாமலும் நடித்திருப்பர்.

மணிவண்ணனின் உதவியாளராக இருந்ததனால் திரைக்குப் பின் இவரது பணி நிறையவே இருந்திருக்கின்றது.  வடிவேலு பட வாய்ப்பில்லாமல் போன போது அவருடன் நடிப்பவர்கள் நிலை என்னாகுமோ என்று  அனைவரும் நினைத்து நடந்தே விட்டது.அல்வா வாசு கல்லீரல் பாதிப்பினால் மிக மோசமான நிலையில் உள்ளதாக செய்தி படித்தேன், மிக வருத்தமாக இருந்தது. குடிக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொண்டால் அறிவுஜீவிகள் ஆத்திரப்படுகின்றார்கள் . ஆனால் இந்த குடி வெறி பலரையும் காவு வாங்கிக் கொண்டேயிருக்கின்றது . அதுவும் சினிமாத்துறையில் அதிகம் நிகழ்வதாகவே தோன்றுகிறது. மிக சரியான உதாரணம் வையாபுரி பிக் பாஸ் நிகழ்சசியில் வெளிப்படையாகவே தான் குடிக்கு அடிமையானதை ஒப்புக் கொண்டது. 


அல்வா வாசு எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். அவரை No.1. அல்லக்கை என்று குறிப்பிட்டதன் நோக்கமே அவரின் அந்த பாத்திரத்தினை அர்ப்பணிப்புடன்  நடித்ததனால் தான். அவரை நான் எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளேன் என்பதற்கான முக்கிய உதாரணம் , உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரம்பா ரவுடி வேடம் அணிந்து மணிவண்ணனை மிரட்டுவார் , அப்பொழுது ரம்பாவுக்கு பின்னணி குரல் அல்வா வாசுதான்.

அவர் நோயிலிருந்து விடுபடுவார் என்ற நம்பிகையுடன் 

செங்கதிரோன்