Tuesday, December 8, 2015

ஜெய்சங்கரின் ஆயிரம் பொய்


ஆயிரம்காலப் பயிரான கல்யாணத்திற்கு ஆயிரம் பொய் சொல்வது பொருத்தாமான ஒன்றுதான். இருப்பினும் இந்தப் பொய் கல்யாணத்திக்கு பின்னர்தான் பல்வேறு விளைவுகளைக் கொடுக்கும். காலம் மாறிப் போச்சு படத்தில் இவ்வாறு பல பொய்களை சொல்லித் திருமணம் செய்த பாண்டியராஜன் , வடிவேலு ,சுந்தராஜன் படுபாட்டை வி.சேகர் அவர்கள் மிக அருமையாக சொல்லி இருப்பார். 



ஆயிரம் பொய் படத்தில் கல்யாணத்திற்கு முன்பே இந்த ஆயிரம் பொய்களால் ஜெய்சங்கர் படும் துன்பங்களை நகைச்சுவையுடன்  சொல்லி இருக்கின்றார்கள்.முக்தா சீனிவாசன் இயக்கம் ,சோ அவர்களின் கதை மற்றும் வசனத்தில் 1969ல் வெளிவந்தது. சோ அவர்கள் இந்தப் படத்தில் பல்வேறு திருப்பங்களை (twist ) வைத்து மிகுந்த பரப்பினை உண்டு பண்ணி இருப்பார் .அதே போல நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை. அதுவும் மனோரமாவினை நவீன மங்கையாக நான் பார்த்த முதல் திரைப்படம் இது , சிறப்பாக நடித்து இருக்கின்றார். 


கதை : பழையப்  பகையினால் பிரிந்து விட்ட இரண்டு குடும்பங்களை ஒரு திருமணம் மூலம் ஒன்றிணைக்க ஜெயசங்கர் பல பொய்களை சொல்லி அதில் மாட்டிக் கொள்ள இதற்கு நடுவே சோவுக்கும் மனோரமாவுக்கும் இடையிலானக் காதலை சேர்த்து வைக்க கூடுதாலாகப் பொய்களை அள்ளி விட இவை அனைத்திலிருந்தும் விடுபட்டு இந்த இரண்டு ஜோடியும் இணைவது தான் கதை .

அனைத்துப் பெரிய நடிகர்களும் நடித்துள்ள இப்படத்தில் (வி கே ராமசாமி ,வாணிஸ்ரீ ,தேங்காய் சீனிவாசன் ,எம்.ஆர் வாசு ) எந்த இடத்திலும் நமக்கு சலிப்பு ஏற்படாமல் அனைவரும் மிக சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பர். ஒரு சின்னக் கதையில் இவ்வளவு திருப்பங்களை வைத்து இருப்பது ஆச்சர்யமளிக்கின்றது . இந்தக் கால தலைமுறையினரிடம் இந்தப் படத்தினை பார்த்து விட்டுக் கதையினை அவர்களுக்கு  சொல்லிப் பாருங்கள் அசந்து விடுவார்கள்.

சிறந்த காட்சிகள் :

சோ மருத்துவராக நடிக்கும் போது செய்யும் கலாட்டாக்கள்

ஜெய்சங்கர் -வாணிஸ்ரீ காதல் காட்சிகள் 

உங்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே கண்டுகளிக்க இது மிக சிறந்த திரைப்படம் .

நன்றி 
செங்கதிரோன்