Saturday, February 25, 2012

கண்டுகொள்ளப்படாத சித்த மருத்துவ மாணவர்களின் போராட்டம்:



      கடந்த பதினைந்து நாட்களாக சித்த மருத்துவ மாணவர்கள் வகுப்புகளைத் தொடங்கக் கோரி தீவிரமாகப் போராடி வருகின்றனர்.டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ முறைகளுக்கான நடுவண் அமைப்பு (CCIM ) பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர் சேர்க்கைக்குத் தடை வித்தித்துள்ளது.

பொதுவாக சித்தமருத்துவ மாணவர்களுக்குப் போராட்டம் என்பதே கல்லூரி வாழ்க்கையின் ஒரு பகுதி  போன்றுதான், மாணவர்களுக்குத்  தேவையானவற்றை அரசாங்ககமோ ,கல்லூரி நிர்வாகமோ செய்து கொடுக்க முயன்றதே இல்லை ,ஒவ்வான்றையும் மாணவர்கள் போராடியே பெற்றனர்.
 முன்பு  சென்னையில் அண்ணா மருத்துவமையின் வளாகத்தில்  அமைந்துள்ள கல்லூரி மற்றும் மருத்துவ மனைக்கு சுற்று சுவரே கிடையாது.அந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்க்கும் இடமாகப் பயன்படுத்தி வந்தனர். இதற்காக மாணவர்கள் பல முறை போராடியும் பலன் இல்லாததால் ஜெயலலிதா முதலமைச்சாராக  இருந்த பொழுது   மிகவும் துணிச்சலாக  அவருடைய வாகனத்தை   மறித்து கோரிக்கை மனுவினை  மாணவர்கள் கொடுத்ததன் காரணமாகவே மருத்துவ மனைக்கான சுற்றுசுவர் கட்டப்பட்டது. இன்று சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் இயங்கிவரும் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அனைத்தும் மாணவர்கள்  தீவிரமாகப் போராடிப் பெற்றவையே.

தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் சித்தர்களால் படைக்கப் பட்ட மருத்துவத்தினை உலகறியச் செய்யும் பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உண்டு, ஆனால் எங்கோ  தோன்றிய ஆயுர்வேதம்,யுனானி,ஹோமியோதி மற்றும் நேச்சுரோபதி போன்ற மருத்துவ முறைகளுக்கு வழங்கப் படும் அதே முக்கியத்துவம் தமிழகத்தில் தோன்றிய தமிழ் மருத்துவத்துக்கும் தமிழ்நாட்டில்  வழங்கபடுவதென்பது ஏற்றுகொள்ள முடியாத ஒன்றாகும்.அண்ணா மருத்துவமனை என்பது சித்த மருத்துவ சிகிச்சையினை மக்களுக்கு வழங்குவதற்காகவே    தொடங்கப்பட்ட  ஒன்று.   அதில்  மற்ற மருத்துவ முறைகளை நுழைத்தன விளைவாகவே  இன்று சித்த மருத்துவம் மக்களிடையே பரவலாக  சென்றடையாமல் உள்ளது.

  அண்ணா மருத்துவ மனை வளாகத்தில் தற்பொழுது சித்த மருத்துவ கல்லூரி மட்டுமின்றி யுனானி மற்றும் நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரிகளும்  இயங்கி வருகின்றன.சித்த   மருத்துவ பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு போன்றவை நடத்த இடவசதி இன்றி இருக்கும் நிலையில் மற்ற மருத்துவ முறைகளுக்கான கல்லூரி அதே வளாகத்தில் தொடங்க அனுமதி அளித்ததில் இருந்து  அரசாங்கத்திற்கு சித்த மருத்தவத்தின் மேல் இருக்கும் அலட்சியத்தினை புரிந்து கொள்ளலாம்.

தமிழ் மருத்துவத்தினை சீரழிப்பதில் தமிழக அரசு, சித்த மருத்துவ நிர்வாகம்  மற்றும் எம்.ஜி.ஆர். பல்கலைகழகம் மூன்றும்  கூட்டாகவே செயல்படுகின்றன.

  தமிழக அரசாங்கம்  இந்திய  மருத்துவ   முறைகளுக்கான ஆணையத்தின் இயக்குனரை   நியமிக்கும் நடைமுறை இங்கு குறிப்பிடப் பட   வேண்டிய ஒன்று  .  ஜெயலலிதாவோ கருணாநிதியோ யாராக இருந்தாலும் தனக்குப்  பிடிக்காத I A .S .அதிகாரியினை  இந்தத் துறையின் இயக்குனராக  நியமிப்பதுதான் தொன்று தொட்ட  வழக்கம். அவர்களும் ஆட்சி முடியும் வரை இந்தப் பணியினை ஓய்வு நேரமாக கருதி ஒரு உருப்படியான காரியமும் செய்வதில்லை. இருப்பினும் டான்சி வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக  சாட்சி சொன்னதன் காரணமாக செயலாளர் அந்தஸ்தில் இருந்த பாரூக்கி I.A.S.  அவர்களை   சித்த மருத்துவத்துறையின் இயக்குனராக ஜெ அரசாங்கம் நியமித்தது. இதற்கு முன் இருந்த இயக்குநர்களைப் போன்று கடமைக்கு அலுவகத்திற்கு  வந்து போய்க்கொண்டிருக்காமல் மிகச் சிறப்பாக செயலாற்றி தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தொடங்குவதில் பெரும் பங்கு ஆற்றினார்.

ஆனாலும் இயக்குனர்களை மட்டுமே குறை கூற முடியாது. அவர்கள் தமிழ் மருத்துவத்தின் தொன்மையை முழுதும் அறிந்தவர்கள் அல்ல, அவர்கள் வெறும் நிர்வாகிகள் .  எல்லாமும் தெரிந்த சித்த மருத்துவர்கள் பொறுப்பான பதவிகலீல்  இருக்கும் பொது செய்யும் காரியம் தான் வெட்கக்கேடானது. இன்று அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்திற்காக  அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கான முழு பொறுப்பும் இவர்களையேச்  சேரும். ஏனென்றால் அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக வழங்கும் நிதியினை பயன்படுத்தாமல் அரசாங்ககத்திற்கே திருப்பி அனுப்பும் ஒரே துறை நாட்டிலேயே சித்த மருத்துவத் துறையாகத் தான்  இருக்கும். அரசு அளித்த நிதியினை சரிவரப் பயன்படுத்தியிருந்தால் இது போன்றதொரு அவல நிலை வருவதனை தடுத்திருக்க முடியும். இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் சென்னையில் உள்ள கல்லூரியின் அங்கீகாரமும் விரைவில் பறிபோகும் .எனவே பொறுப்புள்ள பதவிகளில்  இருக்கும் சித்த மருத்துவர்கள் தங்களால் இயன்ற அளவு சித்த மருத்துவத்தினை தரம் உயர்த்திட பாடுபட வேண்டும்.

மூன்றாவதாக  சித்த மருத்துவத்தினை நசுக்குவதில் முழு மூச்சோடு செயல்படுவது எம்.ஜி.ஆர். பல்கலைகழகம் . நான் முன்பு எழுதிய தங்க பற்பம் பற்றிய தவறான புரிதல் குறித்தான  பதிவில் எம்.ஜி .ஆர். அவர்கள் சித்த மருத்துவ முன்னேற்றத்திற்காக பல நல்ல செயல்களை செய்ததது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.ஆனால் அவர் பெயர் தாங்கிய பல்கலைக் கழகம் சித்த மருத்துவத்தை  குழி  தோண்டி புதைப்பதிலேயே குறியாக இருக்கின்றது.பல்கலைக்கழக துணை வேந்தராக வரும் ஒவ்வொருவரும் தங்கள் ஐந்தாண்டு காலதத்தில் தங்களால் இயன்ற அளவு சித்த மருத்துவத்தினை சிறுமைபடுத்துகின்றனர். முதலில் சித்த மருத்துவப் பட்டத்தினை  போலி மருத்துவப் பட்டம் என்று அறிவிக்க முற்பட்டனர்,நீதிமன்றத்தின் தலையீட்டால் அது முறியடிக்கப்பட்டது. எனவே தற்பொழுது சித்தமருத்துவப் படிப்பில் வரும்  நவீன மருத்துவ பாடத்திட்டங்களை நீக்க சதி செய்து வருகின்றனர். அதாவது நவீன மருத்துவ முறைகளை தங்கள்மருத்துவ முறைகளுடன் ஒப்பிட்டு பாரப்பதற்காகவும் , அவசர சிகிச்சை அளிப்பதற்காகவும் படிக்கும் பாடங்களை நீக்க  மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்

 பேருந்து வசதி கூட இல்லாத கிராமங்களில் கூட சித்த மருத்துவர்கள் சிரமம் பார்க்காமல் சென்று தகுதியான  மருத்துவ சிகிச்சையினை வழங்கி வருகின்றனர். நவீன மருத்துவர்கள் எவரும் கிராமங்களில் சேவை செய்ய தயாராக  இல்லாத நிலையில் நோயாளியின் நிலையினைப் பொறுத்து சித்த மருத்துவ  சிகிச்சையுடன் நவீன மருத்துவ சிகிச்சயையினையும் வழங்கி வருவதனை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தமிழ்   ஊடங்களில் சித்த மருத்துவம் குறித்த செய்திகளை அதிக முக்கியத்துவம் அளித்து வெளிய்டப்படுவதில்லை என்ற வருத்தம்  சித்த மருத்துவர்களுக்கு நீண்ட நாட்களாகவே  உண்டு. சித்த மருத்துவம் தொடர்பான செய்திகளை பத்திரிக்கைகளின் கடைசிப் பக்கத்தில நான்கு வரிகளில் வெளியிட்டு தங்கள் கடமையினை முடித்துக் கொள்கின்றனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தங்கள் பாரமபரியம் சார்ந்த செய்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிடுகின்றனர்.அவர்கள் நாட்டில் இதனைப்  போன்றதொரு சிறப்புகள் நிறைந்த மருத்துவம் இருந்திருந்தால் உலகின் மூளை முடுக்கெல்லாம் கொண்டு சென்றிருப்பார்கள்.
 பதிவுலகிலும் சமீபத்தில் இதைப்போன்றதொரு  அவல நிலை நடந்தேறியது. கம்யூனிச கருத்துகளை சிறப்பாக எழுதி வரும் கலையரசன் அவர்கள் சித்த மருத்துவம் சீன மருத்துவத்தின் கிளை என்பதனை போன்றதொரு பதிவினை எழுதினார்.  அதற்கு உதாரணமாக அவர் குறிப்பிட்டது  அகத்தியரின் உருவம்,அகத்தியரின் தோற்றத்தில்   குள்ளமாக இருப்பதினால் அவர் சீனாவைச் சார்ந்தவராம் ,அனைவருக்குமே தெரியும் திருவள்ளுவர் ,கண்ணகி மற்றும் சித்தர்கள் படங்கள் போன்றவை கற்பனையாக வரையப் பட்டவை என்பது, எனவே நான் என்னுடைய பதிவில் சித்த மருத்துவத்திற்கும் சீன மருத்துவத்திற்கும் மருந்துகள் தயாரிப்பில் இருந்து நோய் கணிப்பு முதல் எந்த  ஒற்றுமையும் இல்லை என்பதனை தகுந்த ஆதாரங்களுடன்  குறிப்பிட்டிருந்தேன்.

அனைத்து துறைகளிலும்  இருப்பதனைப் போன்றே சித்த மருத்துவர்களிடையேயும் ஒற்றுமை என்பது காணக்கிடைக்காத ஒன்றாகவே இருக்கின்றது. இதுவரை அனைத்து சித்த மருத்துவர்களையும் உள்ளடக்கிய ஒரு வலுவான  அமைப்பு  எனபது உருவாகவே இல்லை. எனவே சித்த மருத்துவம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் போராட்டம் அனைத்துமே அதன் முக்கியத்துவத்தினை இழந்து விடுகின்றது.

இன்றைய நவீன உலகில் படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்லும் பல்வேறு படிப்புகள் இருக்கின்ற நிலையில் சித்த மருத்துவம்  படிப்பதற்காக உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டிருக்கும் மாணவர்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றி சித்த மருத்துவ வகுப்புகளை தொடங்கக் அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்.