Sunday, April 1, 2018

பாமகவுக்குள்இருப்பது தமிழ் தேசியமா , திராவிடமா , இந்துத்வாவா ?ஆண்டாள் சர்ச்சை , பெரியார் சிலை உடைப்பு இந்த இரண்டு விவகாரங்களினால் பாமகவுக்குள் ஒரு பூகம்பமே நிகழ்ந்திருக்கின்றது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவரகள் கிழித்த கோட்டை தாண்டாத அவர் கட்சி தொண்டர்கள் , பெரியார் சிலை தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கைக்காக அவரிடம் முரண்பட்டு முகப்புத்தகத்தில் ஏராளமான தொண்டர்கள் கருத்துக்களை வெளியிட்டது கண்டு கட்சியின் முன்னணியினர் திகைத்து விட்டனர்.

சமூக நீதியினை முன்னிறுத்தி உருவான ஒரு கட்சியில் இப்படிப்பட்ட இந்துத்துவாவுக்கு ஆதரவான ஒரு தொண்டர் கூட்டம் உருவானது எவ்வாறு என்று அவர்களே குழப்பத்திற்கு உள்ளாகி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சென்னை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர்கள் சந்திப்பின் போது  கொடுத்த பேட்டியினை இங்கு நினைவு கூர்வது அவசியம் என்று நினைக்கிறேன். மருத்துவ கல்லூரியில் பயிலும் போது மாலை நேரங்களில் பெரியார் , அண்ணா கூட்டங்களுக்கு சென்றதன் மூலமாகவே சமூக நீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார் .
பாமகவின்உறுப்பினர் அட்டை 


பாஜகவுடன் திமுக, அதிமுக, மதிமுக என ஏகப்பட்ட கட்சிகள் கூட்டணி வைத்தருந்தாலும் அந்தக் காட்சிகளில் பாமகவில் ஏற்பட்டது போன்ற இந்துத்துவாவுக்கு ஆதரவான கூட்டம் உருவாகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பாமகவில் மட்டுமே ஏற்பட்டதற்கு காரணங்கள் என்ன? முதலாவதாக பாமகவின் அரசியல் பயிலரங்கத்தில் அன்புமணியை எப்படி முன்னிறுத்துவது என்று தொண்டர்களுக்கு  கொடுக்கப்பட்ட பயிற்சியினை விட தங்கள் கொள்கை எது என்று தெளிவாக பயிற்சி அளித்திருந்திருக்கலாம். மேலும் வன்னிய சமுதாயம் இயல்பாகவே பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமுதாயம் , இதனை நன்கு உணர்ந்து கொண்ட பிஜேபி , பல்வேறு பொய்யான  வாக்குறுதிகளை அளித்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கின்றனர்.
பெரியார் சிலை உடைப்புக்காக ராமதாஸின் பதிவுக்கு எதிராக அந்த கட்சி தொண்டர்களின் எதிர்வினை 


வன்னியர்களுக்கு இட  ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது மட்டுமே போதும் என்று பாமக நினைக்கின்றது , அதனையும் தாண்டி அந்த இட ஒதுக்கீட்டினைப் பயன்படுத்தும் அளவுக்கு அவர்களுக்கான விழ்ப்புணர்வினையும் , வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கல்வி அறிவு தான் அவர்களை முற்போக்காக சிந்திக்க வைக்க வழிவகை செய்யும் . அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து வன்னியர்களின் பொருளாதரமும் , கல்வி அறிவும் மேம்படா விட்டால் பெரும்பாலானோர் இந்துத்வா தூண்டி விடும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்துத்தவா வன்னியர்களை குறிவைப்பதற்கான காரணமே பெரும்பான்மை சமூகமாக இருக்கும் இவர்களை தூண்டி விட்டு கலவரம் உண்டாக்கி தங்கள் பலனடையப்பார்க்கின்றார்கள்.மருத்துவர் ராமதாஸ் இடதுக்கீடுக்காக போராடியதற்கான காரணம் வன்னியர்கள் அருவா ஆயுதம் ஏந்தாமல் அறிவு ஆயுதம் எந்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் , ஆனால் இந்துத்துவ அமைப்புகள் வன்னியர்களை அருவா ஆயுதம் ஏந்தி  காலம் முழுக்க அவர்களின் அடியாட்களாக வைத்திருக்க ஆசைபப்டுகின்றனர்.பாமகவில் அதிருப்தியாக உள்ளவர்களை, பாஜக  சத்ரிய சாம்ராஜ்யம் என்ற அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் வன்னிய வாக்குகளை சிதறடிக்கும் முயற்சியினையும் தற்போது செயல்படுத்தி வருகின்றது. 

இந்துத்வா வேண்டாம் என்றால் திராவிடம் பாமகவுக்கு பொருத்தமானதா ? தமிழ்நாட்டில் மற்ற மொழியினரின் ஆதிக்கம் அதிகம் என்று மறுப்பதற்கில்லை. இருப்பினும் திராவிடம் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் பிரமணல்லாத சமூகத்திடம் வலுவாக கோலோச்சி கொண்டிருக்கின்றது , அதுவும் குறிப்பாக நன்கு படித்த சமூகத்தினர் திராவிடத்தின் sleeper cell ஆகவே இருக்கின்றனர். பாமகவில் இருக்கும் பெரும்பாலானோரின் பெற்றோர்கள் இன்றும் இரண்டு திரவிட கட்சிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர் . அதிமுகவின் அனுதாபியாக இருந்தவர்கள் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரே பாமகவை ஆதரிக்கின்றனர். திமுகவோ துரைமுருகன், வேலு , ஜகத்ராட்சன் போன்றோரை முன்னிறுத்தி வன்னியர் ஆதரவை வலுவாக்குகின்றனர்.திராவிட கட்சிகளின் தோல்வியினை முன்னிறுத்துவது கண்டிப்பாக தேர்தலில் பலன் கொடுக்கும் . அதே நேரத்தில் மண்ணுக்கேற்ற  அரசியல் எனப்து இன்றும் திராவிடக் கொள்கைகள் தான் எனபதனை தங்கள் தொண்டர்களுக்கு மிக அழுத்தமாக முன்னிறுத்த வேண்டும். பாமகவின் முன்னாள் எம்பி மருத்துவர் செந்தில் பலமுறை தொலைக்காட்சிக்களிலும் , கட்டுரைகளிலும் திராவிடத்தின் அவசியத்தினை குறிப்பிட்டு இருக்கின்றார். அவரை பாமகவின் அரசியல் பயிலரங்கத்தில் தொண்டர்களுக்கு வகுப்பு எடுக்க சொல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தமிழ் தேசியத்தின் முக்கிய அங்கமாக இருப்பது பாமக தான் என்பது அதன் ஒவ்வொரு போராட்டமும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர்களுக்கு ஒரு பாதிப்பு  என்றால் அதற்காக முதலில் குரல் கொடுப்பது மருத்துவர் ராம்தாஸ் தான்.  

மேற்சொன்னவற்றிலிருந்து நீங்களே யூகிக்க முடியும் ,பாமக முழுக்க முழுக்க தமிழ் தேசிய கட்சி என்பதும் , அது என்றும் இந்துத்துவா நோக்கி நகரவே நகராது. பாமகவில் இருக்கும் ஒரு சிலரின் எச்ச ராஜ்வின் மீதான கரிசனம் மற்றும்  இந்துத்துவ அரசியல் குறித்த அனுதாபம் போன்றவற்றை , அவர்களுக்கு புரியும் முறையில் எடுத்துக் கூறி நல்வழிப்படுத்த வேண்டும்.

நன்றி 
செங்கதிரோன்