Friday, January 15, 2016

ஆண்களின் காலை நேர எழுச்சிக்கு காரணம் என்ன?

தூங்கி எழுந்தவுடன் அனைத்து ஆண்களுக்கும் ஒரு சங்கடம் ஏற்படும். இந்த சங்கடம் ஏன் ஏற்படுகின்றது ? இந்த சங்கடத்தினால் உடலில் ஏதேனும் பிரச்சனை நிகழுமா ? இது நம் ஒருவருக்கு மட்டும் தான் நிகழ்கின்றதா என்றெல்லாம் நினைத்ததுக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு அவர்களின் சந்தேகத்திற்கான விடை தான் இந்தப் பதிவு.

எந்த விதமான காமக் கிளர்ச்சி சிந்தனையும் திகழாத அந்த அதிகாலை நேரத்தில் ஆணின் அந்தரங்க உறுப்பானது அளவுக்கதிமாக நீண்டு இருக்கும்.சிறு நீர் கழித்த சில மணித்துளிகளில் அது மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விடும். இப்படிக் காலை நேரத்தில் எழுச்சி அடைந்திருப்பதற்கான காரணம்  உடலில் ஏற்படும் மிக இயல்பான மாற்றம் தான் , இது அசாதாரணமான ஒன்றல்ல.

ஒரு சிலர் ஆண்  உறுப்பில் ஏதேனும் கோளாறு இருப்பதினால் தான்  இது நிகழ்கின்றது எனவும் , மற்றும் சிலர் அளவுக்கதிகமான சிறுநீர் தேங்கி இருப்பதினால் தான் இது ஏற்படுகின்றது என்றும் நினைக்கின்றனர் .இவை அனைத்துமே தவறான கற்பனைதான்.

மருத்துவரீதியான விளக்கமே  உங்கள்  சந்தேகத்திற்கு சரியான பதிலாக இருக்கும் . Morning Glory என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டாலும் மருத்துவர்கள இதனை Nocturnal Penal Tumescence (NPT ) என்றழைக்கின்றனர்.பல்வேறு காரணங்களை மருத்துவ உலகம் பட்டியலிடுகின்றது .ஒவ்வொன்றாக பார்ப்போம் 

1. நம்முடைய தூக்கம் என்பது பல நிலைகளைக் கொண்டது . அவற்றில் ஒன்றான REM (Rapid Eye Movement ) நிலையில் தான் ரத்தமானது அதிகம் ஆணுறுப்பில் பாய்ச்சப்படுவதினால் எழுச்சி ஏற்படுகின்றது . ஒரே இரவில் இந்த REM நான்கு முதல் ஐந்து முறை வரை நிகழும்.( அதிக ரத்தம் ஓட்டம்  ஆணுறுப்பில் நிகழ்வதால்தான் விறைப்புத்தன்மை ஏற்படும்)

2.Testosterone என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகாலையில் தான் அதிகம் இருக்கும்,அதுவும் இது போன்ற எழுச்சி நிகழ்வதற்கு கூடுதலானக் காரணம்.

3.சிறுநீர்ப்பையில் தேங்கி இருக்கும் அதிகப்படியான நீரானது தானாக வெளியேறிவிடாமல் தடுப்பதற்காக தான் இது போன்ற எழுச்சி நிகழ்வதாக சிறுநீரக் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேற்சொன்ன மூன்றும் தான் காலை நேர எழுச்சிக்கான முக்கியக் காரணங்கள். ஏன் ஆணுக்கு மட்டும் இது  நிகழ்கின்றது என்று நீங்கள் மனதில் நினப்பதினை உணர முடிகின்றது . 

பெண்களுக்கும் இது ஏற்படுகின்றதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் .அது மட்டுமன்றி விலங்குகளுக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று உறுதியாக நம்புகின்றேன் . இனி காலை நேரத்தில் நடக்கும் இந்த எழுச்சிக் கண்டு அச்சப்பட வேண்டாம்.

நன்றி 
செங்கதிரோன்