Wednesday, October 28, 2015

சண்டி வீரன் தோல்வி -பஜ்ரங்கி பைஜான் வெற்றி :ஏன் ?

மண் மணம் சார்ந்து படம் எடுக்கக் கூடியவர்களின் பட்டியல் ஒன்று எடுத்தால் அதில்  இயக்குனர் சற்குனத்திற்கு ஒரு முக்கிய இடம் இருக்கும், அவரின் களவாணிப் படம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. வட  மாவட்டம் சார்ந்த எனக்கு அந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தயும் மிக எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடியும். 

இரண்டு கிராமங்களுக்கு சாமி சிலையால் வரும் பகை, எருக்கம் பூவினைக் கொண்டு தேர்வில் வெற்றியா தோல்வியா என தீர்மானிப்பது , அம்பாசிடர் கார் நிறுத்துமிடம் , டியூஷன் சென்டர் என்று பல நிகழ்வுகள் வட மாவட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கக் கூடியவையாக இருந்தன. தமிழ் சினிமா  மதுரை போதையில் தத்தளித்துக் கொண்டிருக்க சற்குணத்தின் இந்தப் படம் ஒரு புதிய உலகை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது.


ஆனால் அடுத்து அவர்  கொடுத்த தோல்வி படங்களினால் சறுக்கல் குணமாக மாறிவிட்டார். நையாண்டியின் மோசமான தோல்விக்குப் பின்னரும் அவரின் திறமை மேல் நம்பிக்கை வைத்து,  இயக்குனர் பாலா  அவருக்குக் கொடுத்த வாய்ப்புதான் சண்டி வீரன் . இந்தப் படத்தின் ட்ரைலர் பார்த்த பொழுது அப்பாடா மீண்டும் மண் சார்ந்தக் கதை கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் என்றெண்ணினேன் .ஆனால் நடந்ததோ சற்று எதிர்மறை. ஏன் எதிர்மறை என்று ஆராயும் முன்னர் பஜ்ரங்கி பாய்ஜான் பட வெற்றிக் குறித்து பார்ப்போம் .

பஜ்ரங்கி பைஜான்(Bajrangi Bhaijaan)
வாய்பேச முடியாத ஒரு பாகிஸ்தான்  சிறுமி இந்தியாவில் தனித்து விடப்படுகின்றாள். அவள் தீவிர இந்துவான சல்மானிடம் தஞ்சம் அடைய அச்சிறுமியை பாகிஸ்தான் சென்று சேர்ப்பிக்க சல்மான் செய்யும் சாகசம் தான் பஜ்ரங்கி படத்தின் கதை. முதல் பாதி இந்துக்களுக்காகவும் , இரண்டாம் பாதி முஸ்லீம்களுக்கு  என்று மிக அருமையாக எடுக்கபட்டு மிகப் பெரும் வெற்றி அடைந்தது இந்தப் படம் . முதல் பாதியில் இந்துக் கோவில், ஆர்.ஸ் .ஸ்  என்று செல்லும் ,இரண்டாம் பாதியில் பாகிஸ்தானின் தர்க்கா , அம்மக்களின் இந்தியா குறித்த நெகிழ்ச்சி மிக்க உணர்வுகள் என்று நம்மைக் கலங்கடிக்க செய்யும் காட்சிகள் உள்ளன. இந்தப் படத்தினை இது வரைப் பார்க்காதவர்கள் உடனடியாகப் பாருங்கள் .இப்போது சண்டி வீரன், இரு கிராமங்களுக்கு இடையேயான குடிநீர் பிரச்சனை தான் படம் , அதில் உப்பு சப்பில்லாத  காதலை கலந்து வீணடித்து விட்டார்.இரு நாட்டுப் பிரச்சனை குறித்தே படம் எடுக்கும் போது , இரு மாநிலங்களுக்கிடையான காவேரிப் பிரச்சனையைக் கொண்டே திரைக்கதையை அமைத்திருக்கலாம்.  தென்னிந்தியாவில்  நமக்கும் கன்னடர்களுக்கும் தான் அதிக தொடர்பு இருக்கின்றது .பெங்களூரில் எண்ணற்ற  தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள்.

இந்த இரு மாநிலத்தையும் இணைக்கும் விடயங்கள் பல இருக்க சற்குணம் இதனைக் கொண்டே திரைக்கதை அமைத்திருக்கலாம் ,அதுவும் இந்தப் படத்தின் கதாநாயகனே கன்னடர் தான் ,எனவே அந்த மாநிலத்தவரும் எந்த ஒரு பிரச்சனையும் செய்திருக்க மாட்டார்கள் .இரு மாநிலத்திலும் காவேரிப் பிரச்சனையை பெரிது படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரும் பாடமாக அமைந்திருக்கும்.

பஜ்ரங்கிப் படம் எவ்வாறு இந்த இரு நாட்டில் உள்ள நல்ல உள்ளங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டியதோ அவ்வாறே சண்டி வீரன் படமும் ஒரு வேளை காவேரியை மையைப் படுத்தி எடுத்து இருப்பின் தண்ணீர் இன்றி அவதிப்படும் விவசாயிகளின் நிலை இரு மாநில மக்களும் உணர்ந்து இருப்பர். மேலும் இரு மாநில மக்களும் ஒருவர் மீது ஒருவர் எந்தக் காழ்ப்புணர்வின்றி  வாழ்கின்றனர் என்ற உண் மையினையும்  எடுத்துக் கூறும்  வாய்ப்பு கிட்டி இருக்கும் 

சற்குணம் அவர்களே அடுத்த படத்தில் ஒரு வலுவான திரைக் கதையுடன்  வட மாவட்ட சிறப்புகளை உலகுக்கு உணர்த்துங்கள்.

நன்றி 
செங்கதிரோன்