Friday, May 6, 2016

திருவள்ளுவர் குறிப்பிட்ட வடிவழகிகளை எப்பொழுது திரையில் காண்போம்?



பள்ளிப் பருவத்தில் திருக்குறளின் முதல் இரண்டு பாகங்களை  கடமைக்குப் படித்த நாம் வயது வந்த பிறகு மூனறாம் பாகத்தை மிக ஆர்வமாகப் படிக்கின்றோம். பாலியல் கல்வியின் அவசியத்தினை பன்நெடுங்காலத்திற்கு முன்பே உணர்ந்து அதற்கென ஒரு அத்தியாயத்தினை எழுதி வைத்தவர் தான் திருவள்ளுவர்.

வள்ளுவர் எழுதியக் கீழ்க்கண்ட குறளில்  பெண்ணை வடிவழகி என்று வர்ணிக்கின்றார். முதலில் இந்தக் குறளையும் , அதன் பொருளையும் படியுங்கள்.
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

திருவள்ளுவரின் காலம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது . அக்காலத்திலேயே நம் பெண்கள் மிக அழகாகவும் நல்ல வடிவாகவும் இருந்திருக்க வேண்டும். அதனாலயே தான் திருவள்ளுவர் அதனை தன் நூலில் வடிவான அழகி என்று வர்ணித்துள்ளார்.



தற்பொழுது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது திருமணம் செய்ய இருக்கும் ஆண்கள் அனைவரும்  தங்களுக்கு தமன்னா போல பெண் வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர். வெளிமாநில நடிகைகளின் வருகைக்குப் பின்னர் நம் தமிழ்ப் பெண்களை கேவலமாகப் பார்க்கும் சூழல் அதிகமாகி விட்டது.


இந்த மயக்கம் நமக்கு மட்டும் தான் என்பதனை உங்களுக்கு உதாரணத்துடன்  கூறுகின்றேன்.

நான் ஸ்பெயின் நாட்டில் வசித்தபொழுது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் ரிபப்ளிக் நாட்டைச் சேர்ந்த நண்பனுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்த பொழுது எதிரில்  அவன் நாட்டை சேர்ந்த ஒரு கறுப்பினப் பெண் வந்தாள். உடனே இவன் மிக உற்சாகமாகி அந்தப் பெண்ணின் அழகை வர்ணிக்க ஆரம்பித்து விட்டான்.அழகிகளின் தேசமான ஸ்பெயினில் இருந்து கொண்டு இவன் ஏன் இந்தக் கறுப்பினப் பெண்ணை ரசிக்கின்றான் என்று எனக்குத் தோன்றியது. மேலும் அதே நேரத்தில் ஒரு தமிழ் பெண் வந்திருந்தால் கண்டிப்பாக நம் கவனம் அங்கே திரும்பாது .ஏனென்றால் வெள்ளை தான் அழகு என்றும் வெளிநாட்டுப் பெண்கள் தான் பேரழகிகள் என்றும் நம் ஆழ்மனதில் பதிந்து விட்டது.  மேலும் மற்ற நாடுகளில் நம் நாட்டைப் போன்று உள்ளூர் அழகிகளை உதாசினப்படுத்தி விட்டு மற்ற தேசத்து அழகிகளை கொண்டாடும் அவல நிலை இல்லை. அதனால் தான அவர்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் தங்கள் நாட்டுப் பெண்களின் அழகைப் போற்றி மகிழ்கின்றனர்.

இயக்குனர்களும் கதாநாயகர்களும் வெளிமாநில நடிகைகளையே தெரிவு செய்து படத்தின் கதையையும் கெடுத்து, நம் ரசனையையும் கெடுக்கின்றனர். திரைத்துரையில் இருந்து கொண்டே இதற்காக குரல் கொடுத்தவர் மாதவன் ஒருவர் மட்டுமே , அவர் தமிழ் தெரிந்த நடிகைகளை நடிக்க வையுங்கள் அப்பொழுதுதான் அந்தப் படத்தின் கதை புரிந்து நடிகையின் ஈடுபாடு சரியாக இருக்கும் என்று கூறினார்.

ஆனால் இங்கோ குழந்தை நட்சத்திரம் முதல் அம்மா வேடம் வரை அனைத்திற்குமே வெள்ளை நிறத்தை அளவுகோலாக வைத்தே தேர்வு செய்கின்றனர்.


உலகில் தலை சிறந்த சினிமாவான ஈரானிய சினிமா முதல் ஐரோப்பிய சினிமா வரை அனைத்திற்கும் அம்மண் சார்ந்த மக்களையே தேர்ந்தேடுப்பதனால் தான் அவை மிக சிறப்பான ஒன்றாக விளங்கி வருகின்றன.

தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதனால்  தமிழில் அனைவரும் பெயர் வைப்பதைப் போல , தமிழ் மக்களை நடிக்க வைத்தால் மேலும் பல சலுகைகள் என்று அரசாங்கம் அறிவித்தால் இந்த நிலைமை மாறும் என்றே நினைக்கின்றேன்.சமீபத்தில் கூட ஒரு  தமிழ் நடிகை இது குறித்து தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.

இனியாவது நம் தமிழகத்தில் உள்ள பெண்களை வடிவழகிகளாகவும் பேரழிகிகளாகவும் பாருங்கள்.

பின் குறிப்பு: இந்த வடிவழகி என்ற பெயர் மட்டும் இன்றுவரை இருந்து வருகின்றது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் லேப்ட்டினன்ட்டாக இருந்தவரின் பெயர் வடிவழகி.

அது மட்டுமன்றி வெள்ளனூர் வடிவழகி அம்மன் என்று ஒரு தெய்வத்திற்கும் இந்தப் பெயர் இருக்கின்றது. 

உங்கள் காதலியையோ அல்லது மனைவியையோ  வர்ணிக்க வேண்டுமென்றால் திருக்குறளில் உள்ள காமத்துப் பாலைப் படியுங்கள்.


நன்றி 
செங்கதிரோன்