Monday, March 2, 2020

தமிழ்நாட்டின் ஐரிஷ் மேன்;



இந்த வருடம் வந்த ஹாலிவுட் படங்களில் முக்கியமானது ஐரிஷ் மேன். ஆஸ்கர் அவார்டுக்கு இந்தப் படம் பரிந்துரைக்கப்படும் அளவுக்கு சினிமா விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது .ஆனாலும் Parasiteன் வெற்றியினால் பல படங்களுக்கு உலகளாவிய அதிக அளவில் கவனம் பெறவில்லை . Parasite படத்தின் இயக்குநர் பூங் ஜூன் ஹு ஆஸ்கர் விருது விழா மேடையிலேயே ஐரிஷ் மேன் இயக்குனர் மார்ட்டின் சார்க்கோசியைப் பாராட்டி பேசினார்.


இந்தப்பதிவு ஐரிஷ் மேன் படம் பற்றியதல்ல , அந்த படத்தில் வந்த ஒரு காட்சியும், சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்சசியையும் மையப்படுத்தியப் பதிவு.

ஐரிஷ் மென் படத்தில் அல் பசினோ (Al Pacino ) தன மனைவியைப் பற்றி குறிப்பிடுகையில் she` is the killer and I `m the sweet heart -இதன் அர்த்தம் இவள் கொலைகாரி, நான் அன்பானவன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் கதைப்படி அல் பசினோ தான் கொடூரமானவர். தன் மனைவியின் குணத்தினால் அவரை கொலைகாரி என்று செல்லமாக குறிப்பிடுவார்.


புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அவரும் நானும் என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.அவ்வப்போது இந்நிகழ்ச்சியினைப் பார்ப்பதுண்டு.இதில் அரசியல்வாதிகள் அவர்களின் மனைவியுடன் கலந்துகொண்டு தங்கள் இல்வாழ்க்கை குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவார்கள்.
இந்நிகழ்ச்சியில் என் கணவர் எனக்கு Barbie பொம்மை போல, அவரை நான் அப்படித்தான் கூப்பிடுவேன் என்றார். யார் அந்த Barbie என்று தேட கேமரா அவர் பக்கம் திரும்பியது , அந்த Barbie பொம்மை பாரதிய ஜனதாவின் முக்கியத்தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன். விவாத நிகழ்ச்சிகளில் மற்ற கட்சிக்காரர்களை வெளுத்துவங்குவது , மிக அலட்சியமான பேச்சு என்று இடது சாரிகளுக்கு வில்லனாகவும், வலது சாரிகளுக்கு ஹீரோவாகவும் தோன்றும் ஒருவர் அவர் மனைவிக்கு Barbie பொம்மையாகத் தெரிவதைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன்.

அதற்கான காரணத்தினை அவர் மனைவி மிக அருமையாக விளக்கினார் . வலது சாரி சித்தாந்த கருத்தியலைக் கொண்டவர்கள் வீட்டில் பிற்போக்காக ஆணாதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்வார்கள் என்றே நினைப்போம் .ஆனால் ராகவானோ மனைவி தாமதமாக வீட்டிற்கு வந்தால் அவருக்கு சமைத்துக் கொடுப்ப்பாராம். அது மட்டுமல்லாமல் மனைவி பரதநாட்டிய பள்ளி வைத்திருப்பதால் அவரின் தொழிற்சார்ந்து உதவிகளையும் அறிவுரைகளையும் வழங்குவார் என்று குறிப்பிட்டார்.
மொத்த நிகழ்ச்சியையும் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தேன். வலது சாரி சித்தாந்த கருத்தியலாளர்கள் அனைவருமே இப்படி நடந்து கொள்வார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் ராகவன் போன்றோர் பெண்களை மதிக்கும் பழக்கம் அனைத்து ஆண்களுக்குமே நல்ல ஒரு பாடம்.
ஐரிஷ் மேனில் அல் பசினோ தன் மனைவியை கொலைகாரி என்று செல்லமாக குறிப்பிடுவதையும் , கே.டி.ராகவன் அவர்களின் மனைவி அவரை Barbie பொம்மை என்பதன் அர்த்தம் ஒன்றுதான் . ஊருக்குள் நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மனைவி முன் அனைவருமே குழந்தைதான்.

செங்கதிரோன்

கார் தீ : விண்டர் விநோதங்கள்

நம்மூரில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் போது ஏசி கார் வைத்திருப்பவர்கள் வீட்டில்தூங்காமல் காரில் தூங்குவார்கள். இதனால் பல விபரீதங்கள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.இதே போன்றதொரு நிகழ்வு கனடாவில் சமீபத்தில் நடந்தது .ஆனால் அது துன்பியல் சம்பவமா அல்லது துணிவான சம்பவமா என்பதை இந்த பதிவை படிக்கும் நீங்க தான் முடிவு செய்ய வேண்டும்.

கனடா போன்ற குளிர் பிரதேசங்களில் காருக்குள் அவரு மிதமான வெப்பம் (heating system) இருப்பது இன்றியமையாத ஒன்று. . பெரும்பாலான கார்களில் seat ஹீட்டர் என்றொரு வசதி கூட உண்டு . குளிரின் அளவு சில சமயங்களில் -20 முதல் -40 அளவுக்கு கூட செல்லும். அச்சமயங்களில் உடல் முழுக்க விறைத்துப் போகும். காருக்குள் வெப்பம் போதுமான அளவு இருந்தால் தான் பயணம் சிறப்பாக இருக்கும்.
காலையில் வேலைக்கு கிளம்பும் முன் முதல் வேலையாக காரில் heater on செய்து காரில் மேல் படிந்திருக்கும் பனி முழுவதையும் அகற்றி விட்டு 15-30 நிமிடங்களுக்கு பிறகு தான் காரை ஓட்ட முடியம். 

நீண்ட நேரம் பணியில் இருந்த காருக்குள் சென்றால் Fridgeக்குள் சென்று அமர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். புதிய தொழில்நுட்பம் வந்து விட்டதால் வீட்டுக்குள்ளிருதே காருக்குள் ஹீட்டர் on செய்ய முடியும். இதனால் காருக்குள் வெப்பம் போதுமான அளவுக்கு இருப்பதோடு மட்டுமல்லாமல் , காரின் மேல் படிந்துள்ள பனியினை (snow) எளிதாக அகற்ற முடியும்.


இந்த இடம் தான் திரில்லிங்கான இடம் , தைரியமா மேல படியுங்கள் :
கனடாவில் உள்ள மக்கள்தொகை மிக மிக குறைவாக உள்ள ஒரு மாநிலமான யூகான்(Yukon ) பகுதியில் இரவு நேரப்பயணத்தினை மூவர் மேற்கொண்டனர். நன்றாக அமைந்த பயணத்தில் திடீரென கார் பழுதாகிவிட்டது. வெளியிலோ -50 டிகிரி குளிர் ( நம்மூரில் வெப்பநிலை எப்பொழுதும் +35 அல்லது அதற்கு அதிகம் இருக்கும்). மிக முக்கியமாக அவர்களை இருந்த இடத்தில் செல்போன் சிக்னல் இல்லாதததால் அவரச உதவிக்கு 911 கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

காருக்குள்ளும் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க முடியாது .வெளியே சென்றால் பனியில் விறைத்து செத்துப்போகவும் வாய்ப்பிருக்கிறது. காரை விட்டு வெளியில் வந்த அவர்கள் உயிர் பிழைக்க என்ன வழி என்று யோசித்தார்கள் . குளிரை சமாளிக்க வெப்பம் தேவை , எனவே ….இந்த இரவு நேரத்தில் கொட்டும் பனியில் எந்த ஒரு பொருளையும் எரித்து குளிர் காய முடியாது . அவர்கள் கண்ணில் எரிக்கக்கூடிய பொருளாக தெரிந்தது அவர்கள் பயணம் செய்த கார் மட்டுமே , உயிரின் மதிப்பை விட காரின் மதிப்பு பெரிதாக தெரியாததால் ஒரு மனதாக முடிவு செய்து காரை உடைத்து எரித்து குளிர் காய்ந்து உயிர் பிழைத்தனர். காலையில் அந்த வழியாக வந்த ஒருவர் இவர்களை மீது மருத்துவமனையில் சேர்த்தனர்.

கனடா முழுவதும் இந்த செய்தி மிகப்பெரும் பேசுபொருளானது. காவல்துறை நீண்ட நேரப்பயணம் மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீண்டும் அறிவுறுத்தினர்.

காட்டை வித்து கள்ளு குடித்தது , சுனாமியில் ஸ்விம்மிங்போட்டது போன்ற நம்முடைய பெருமைகளையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக அமைந்துவிட்டது காரை எரித்து குளிர் காய்ந்த விவகாரம். 
செங்கதிரோன்