Monday, July 17, 2017

ஜிஎஸ்டி -கதிராமங்கலம் -நீட்

 தமிழகத்தையே  உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த மூன்று பிரச்சனைகள் குறித்த பார்வை 

ஜிஎஸ்டி: இந்தியா முழுமைக்கும் ஒரே வரி என்ற இந்த திட்டத்தினை காலத்தின் கட்டாயம் கருதி நாங்கள் கொண்டு வருகின்றோம் என்று வருத்தத்துடன் செய்ய வேண்டிய ஒரு செயலை , ஏதோ இந்த திட்டத்தினால் இந்தியாவில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் எனப்து போல் நாடாளுமன்றத்தில் விழா எடுத்து கொண்டாடுவதைப் பார்க்கவே அசூசையாக இருந்தது. மக்களின் எண்ணவோட்டம் என்ன என்பதனைக் கூட புரிந்து கொள்ளமல் இருக்கும் பிரதமரின் செயல் மிக ஏமாற்றம் அளிப்பதாக இருக்கின்றது. அதே குஜராத்தில் பிறந்த காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியா முழுமைக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு , பலரின் கருத்துகளை கேட்டறிந்து அதற்கேற்றவகையில் போராட்டத்தினை வடிவமைத்து வெற்றி கண்டார். ஜிஎஸ்டி என்பது பயனற்ற ஒன்று என  நான் எண்ணவில்லை , அது மிகவும் அவசியம் தான் , ஆனால் அதனை கவனத்துடன்  செயலாக்கவேண்டும் . மேலை நாடுகளில் ஜிஎஸ்டி இருக்கின்றது , அதனால் அவர்கள் பள்ளி கல்விக்கோ ,மருத்துவத்திற்கோ ஒரு பைசா செலவழிப்பதில்லை . அந்த அரசாங்கம் வரிவருவாயில் தன் குடிமக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றது. ஆனால் நம் நாட்டில் மருத்துவம் மற்றும் கல்வி மிக சுமையான ஒன்றாக இருக்கின்றது. (அரசாங்க பள்ளி , மருத்துவமனைகள் இலவசம் என்றாலும் எந்த ஒரு கட்டமைப்பும் இன்றி அவை அழியும் நிலையில் உள்ளன )


கதிராமங்கலம் : நெடுவாசலைத் தொடர்ந்து கதிராமங்கலமும் போராட்ட பூமியாக மாறி இருக்கின்றது. மக்களின் உணர்வுகளை அரசுகள் செவி சாய்க்காமல் வளர்ச்சி திட்டங்களின் எதிரிகள் என்று அவர்களை முத்திரை குத்துகின்றனர். நெய்வேலி கண்முண்ணே உதாணரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது , நாற்பது ஆண்டுகள் கழித்தும் அரசாங்கங்கள் இன்றும் அப்பகுதி மக்களுக்கு நிலத்திற்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அப்பகுதியை சார்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்படவில்லை. மேலும் தமிழகமே இருளில் மூழ்கிக் கிடந்த போதும் இங்கிருந்து மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதும் நடந்ததை பார்த்தோம் . இந்த படிப்பினை உணர்த்தும் பாடம்  அரசாங்கம் நம்மை வளர்ச்சி என்ற மாய பிமபங்களை காட்டி ஏமாற்றப்போகின்றார்கள் என்பததுதான் . மேலும் இந்த திட்டமானது அரசாங்கம் நேரடியாக செய்யாமல் தங்கள் கட்சி சார்ந்த ஒருவருக்கு இதனை கொடுத்திருப்பதன் மூலம் இவர்களை கண்டிப்பாக நமபவே கூடாது என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டினை நம்மை எடுக்க வைக்கின்றது.


நீட்: நீட் மூலம் தேர்வான மருத்துவர்கள் தான் தரமானவர்கள் என்ற போலி பிம்பத்தினை ஏற்படுத்த கடுமையான முயற்சியில் மத்திய அரசாங்கம்  ஈடுப்பட்டிருக்கின்றது.ஆனால்  தமிழக மருத்துவர்கள் அதனை தினமும் பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தவாரத்தில் கூட ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் சர்ஜரி துறை மிகப்பபெரும் சாதனையை செய்திருப்பதினை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். இது ஒரு சின்ன உதாரணம் தான் , சாதாரண கிராமத்தில் உள்ள மருத்துவமைகளில் கூட சிறப்பான சிகிச்சை தமிழகத்தில் மட்டுமே இருக்கின்றது . தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பினும் அவர்களும் வெளிநாடுகளில் இருப்பது  போன்ற உயர் தர சிக்கிச்சைகளை அளிக்கின்றனர். பக்கத்தில் உள்ள கேரளாவில் மருத்துவத் துறையின் நிலை மிகமோசம். அங்கே அரசு மற்றும் தனியார் மருத்துவ வசதிகள் இன்னும் கூட கிராமங்களில் இல்லை.  அரசாங்க பாடதிட்டத்த்தில் (மாநில ) படித்த மாணவர்கள் தான் இந்த மிகப்பெரும் சாதனைகளை தமிழகத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.  ஆனால் மத்திய அரசாங்கமோ மருத்துவர்களின் தரத்தினை உயர்த்த நீட் என்று சொல்கின்றது , அது மற்ற மாநிலங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம் , தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதே அனைத்து மக்களின் குரல்.


மேற்சொன்ன மூன்றும் தமிழகத்தின் தலையாயப் பிரச்சனையாக இருக்கின்றது. ஆனால் தீர்வினை எட்டும் அளவுக்கான தலைவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதே தற்போதைய நிலை. தீர்வு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உங்களுடன் நானும் காத்திருக்கின்றேன் 

நன்றி 
செங்கதிரோன்