Friday, February 15, 2013

பிரபல பதிவர்களின் மேதாவித்தனம்

பிரபலமாகிவிட்டதாலேயே கேபிள் மற்றும் ஜாக்கி இருவருக்கும் பொது விவகாரங்களில் தங்கள் கருத்தை பதிவு செய்வதில் அவர்களுக்கு இருக்கும்  ஆர்வம் நமக்குப் புரிந்தாலும் தான் சொல்லப் போகும் பிரச்சனை குறித்தான முழுமையானப் பார்வையாகத்தான் அது இருக்க வேண்டுமே தவிர சுயநலன் சார்ந்த ஒன்றாக ஒருபோதும் இருத்தல் கூடாது.

கடந்த வார நீயா நானாவில் குறிப்பிட்டது போல தமிழ் நாட்டின் இளைஞர்களுக்கு மட்டுமல்ல தங்களுக்கு நிறைய தெரியும் என்ற எண்ணம் கொண்ட இந்த இரு பதிவர்களுக்கும் எந்த ஒரு பிரச்சனை குறித்தும் முழுமையானதொரு பார்வை எனபதே அறவே இல்லை.

அதுவும் சினிமா துறையில் இயங்கும் கேபிளும் ,ஜாக்கியும்  சமூகப் பிரச்சனைகளில் தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் உளறிக் கொட்டுவதை சகிக்க முடியவில்லை. ஏற்கனவே பத்திரிகை மற்றும் சினிமா உலகம் இரண்டுமே மக்களுக்கு மட்டமான செய்திகளையும் உணர்வுகளை மட்டும் தூண்டி வியாபாரம் செய்யும் இத்தருணத்தில் பதிவுலகிலும் இதைப் போன்ற நிலை இருப்பது மிக வருத்தமாக உள்ளது.



கேபிள் மற்றும் ஜாக்கி இருவருமே சினிமா விமர்சனம் எழுதவதில் வல்லவர்கள் மற்றும் அதில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உண்டாக்கி அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பாக இயங்கி வருகின்றார்கள் எனபது நூறு சதவீதம் உண்மை.ஆனால் இந்த தகுதியை மூலதனமாக வைத்துக் கொண்டு பொதுப் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது எனபதைத் தான் நான் மேதாவித்தனம் என்று குறிப்பிட விரும்புகின்றேன்.

கேபிள் விஸ்வரூபம் குறித்து தொடர்ந்து வெளியிட்டு வரும் கருத்துக்கள் அனைத்துமே சமூகம் குறித்த ஒரு அக்கறையின்மையும்   தான் சார்ந்த சினிமா துறையின்  மீதான சுயநலன் மட்டுமே வெளிப்படுகின்றது. சென்னையிலே வாழும் கேபிளுக்கு அங்கே  இஸ்லாமிய மக்கள் வீடு கிடைக்கப் படும் பாடும் , அவர்கள் அனைவரையுமே சமூகம் தற்போது குற்றவாளிகள் போல பார்க்கும் நிலைக்கு  இந்த பாழாகப் போன சினிமாவும் ,ஊடகங்களும்   தான் முக்கியக் காரணம் என்பதனை உணராமல் இருப்பது வேதனையான ஒன்று. இதைப் போன்ற நிலையில் பதிவுலகத்தில் பிரபலமாக இருக்கும் கேபிள் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தினை கொச்சைப் படுத்துவது போன்று எழுதுவது எதை எழுதினாலும் படிக்க நான்கு பேர் இருக்கின்றார்கள் என்ற மேதாவித்தனம் தான் முக்கியக் காரணம்.

 ஜாக்கி வால்மார்ட் வருவது குறித்து எழுதிய ஒரு பதிவே போதும்  அவருடைய சமூகம் குறித்தான மேலோட்டமான பார்வைக்கு, அமெரிக்காவில் மூடப்படும் கடைகளை இங்கு குப்பத்தொட்டியாகப் பயன்படுத்தப் போகும் ஒரு செயலுக்கு வக்காலத்து வாங்கி எழுதிய அந்தப் பதிவு முழுக்க முழுக்க சுயநலன் சார்ந்த ஒன்று.ஜாக்கி அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று மேலை நாடுகளில்  இருப்பது சமநிலைச் சமுதாயம்.  பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்பது மிகக் குறைவு. ஆனால் நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு இதைப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களாலோ  டாடா அம்பானி போன்றவர்களால் எந்த நன்மையும் இல்லை. இது நாட்டின் சீரான வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது மாறாக அந்த கம்பெனிகளின் வயிறு வளர்க்கவே பயன்படும். அந்தக் கருத்தினை நியாயபடுத்தி சமூகத்தில் திணிக்க நினைப்பது என்னைப் பொறுத்தவரை    ஏழை மக்களுக்கும் விவசாயத்திற்கும் செய்யும் பாவச் செயல்..

 இவர்களின் கருத்தின் தாக்கம் எனபது இவர்களை மட்டுமே தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு தவறான வழிகாட்டுலாக அமைந்து விடும் ஆபத்தான சூழல்  உள்ளது.இறுதியாக சொல்ல வேண்டியது என்னவெனில் கருத்து சுதந்திரம் என்பதனை தவறாகப் புரிந்து வைத்துக் கொண்டு மனதில் படத்தை எல்லாம் எழுதாமல் சொல்லப் போகும் கருத்தின் முழு விவரங்களையும் படித்தோ கேட்டோ அதன் பின்னர்  உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.