Friday, November 4, 2011

பரிதி இளம் வழுதி வேல் முருகன்- பிரச்சனை ஒன்று ! கட்சி வேறு!!


தமிழக அரசியசில் அதிர்வலைய ஏற்படுத்தியிருப்பது பரிதி மற்றும் வேல்முருகன் இருவர் மீதான கட்சி நடவடிக்கை. இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு அதிரடி அரசியல் செய்பவர்கள்,நல்ல பேச்சாளர்கள்,சட்ட மன்றத்தில் இருவரது பணியும் குறிப்பிடத்தக்கது.
பரிதி பிரபலம் அடைந்ததே சட்ட மன்ற கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கு எதிராக துணிச்சலுடன் போராடியதாலும் அதற்காவே அவர் சிறையில் அடைக்கபட்டதாலும் தான் ,இவை இரண்டும் இவருக்கு தலைமையுடனான நெருக்கத்தையும் கட்சியிலும் அரசியலிலும் முக்கியப் பதவிகள் கிடைக்கக் காரணமாக அமைந்தன.
வேல்முருகன் கணீர் குரலுடன் பேசக்கூடியவர் ,தன் வசீகரப் பேச்சால் பல இளைநர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் பக்கம் ஈர்த்தவர். நெய்வேலி நிலச்சுரங்கத்துக்காக நிலங்களை இழந்தவர்களின் உரிமைக்காகப் போராடியவர் ,ஈழத்தமிழர் போராட்டங்களில் தன்னை அதிகம் ஈடுபடுத்திகொண்டவர் என இவருக்குப் பல முகங்கள் உண்டு .இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கருணாநிதியின் அன்புக்குப் பாத்திரமானவர் என்ற நற்பெயரும் உண்டு .

ஆனாலும் இவ்வளவு திறமை வாய்ந்த இருவரையும் அவர்கள் சார்ந்த கட்சிகள் புறக்கணித்தது ஏன்? வெளிப்படையாக கட்சிக்கட்டுப்பாட்டை மீறி விட்டதால் நீக்கப் பட்டதாக சொல்லப்பட்டாலும் ,இரு கட்சிகளின் தலைமையுமே தனக்குப் பிறகு தன் தனயனிடமே கட்சி இருக்க வேண்டும் என பொதுவான கொள்கையுடன் இருக்கின்றன. எனவே அந்த இருவர் ஸ்டாலின் மற்றும் அன்புமணியின் சொல் கேட்டு நடப்பவர்களே அந்த கட்சிகளில் நீடிக்க முடியும் என்ற மோசமான சூழல் நிலவவுது அனைவருக்குமே தெரியும் .

இது போன்ற நடவடிக்கைகள் மூலம் நாம் வாழ்வது ஜனநாயக நாட்டிலா அல்லது மன்னராட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ என்ற அச்ச உணர்வு ஏற்படுகின்றது .எல்லா திறமையும் வாய்ந்தவர்கள் தங்கள் சுய உழைப்பின் மூலம்முன்னேறியவர்களாகிய இந்த இருவரையும் ஒரே நொடியில் தங்கள் சுய லாபத்திற்காக ஒதுக்கித் தள்ளுவதென்பது ஜனநாயகதிதின் தோல்வி ஆகும் .

கட்சிகள் அனைத்தும் இன்று கார்பரேட் நிறுவனங்களை போல மாறிவிட்டன. லாபம் ஒன்றே நோக்கம் இதனால் தனி நபர் திறமைகள் ,உழைப்பு எவற்றுக்கும் மதிப்பளிப்பதில்லை ,யார் சிறந்த அடிமையாக இருக்கத் தயாரோ அவருக்கு சகலமும் கிடைக்கும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பன்னீர்செல்வம் நிர்வாகத் திறமை,பேச்சுத்திறமை எனஎதுவும் கிடையாது ஒரே தொழில் ஜெயலலிதாவுக்கு சிறந்த அடிமையாக இருப்பது இதனால் முதல்வர் பதவியே கிடைத்தது.

இவை அனைத்துமே நல்லப் பண்புடைய ,தலைமை தாங்கும் தகுதி நிரம்பிய மனிதர்களை அரசியலில் இருந்து நிராகரிக்கச் செய்கின்றது. தலைவனுக்கு துதிபாடும் மனிதர்களினால் நாட்டு முன்னேற்றத்திற்கு எந்த நன்மையையும் இல்லை.இது போன்ற அரசியல் அடிமைகள் தன் தலைவனைப் போலவே தம் மக்கள் நலன் மட்டுமே குறிக்கோள் என்றே செயல்படுவர். இந்த நிலை மாற முக்கியப் பணியாற்ற வேண்டியது பத்திரிக்கைகள் மட்டுமே ,தலைவர்களைப் பிரதானப்படுத்தும் நிலையினை தவிர்க்க வேண்டும்,இல்லையென்றால் சர்வாதிகாரம் ஏற்பட வழிவக்குக்கும்.

No comments: