Wednesday, January 2, 2013

மருத்துவ உலகின் ரஜினி : தெய்வநாயகம். (C .N .D )

தெய்வநாயகம் அவர்களை ரஜினியுடன் ஒப்பிடுவதை அவரை நன்கு அறிந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என்று தெரியும் ,இருப்பினும் இரண்டு வருடம் அவருடன் மருத்துவ உலகில் இருந்த பொழுது நான் கவனித்ததில்   நடை,உடை,ஸ்டைல் என அனைத்திலுமே  எனக்கு  அவர் சூப்பர் ஸ்டாராகவே தெரிந்தார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இறந்து விட்ட அவரைப் பற்றி பெரும்பாலான  ஊடங்களில் குறிப்பிட்டிருந்தாலும் அவற்றில்  எல்லாம் குறிப்பிட மறந்துவிட்ட அல்லது மறைக்கப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

 அனைவருமே அறிந்த ஒன்று சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த அவர் கல்லூரியின் சிறந்த மாணவர் என்ற விருதுடன் படிப்பினை முடித்து இங்கிலாந்தில் நெஞ்சக் நோய் தொடர்பான மேற்படிப்பைப் படித்தார். இதில்  குறிப்பிடத்தக்க ஒன்று சென்னை மருத்துவக் கல்லூரியில் அவருடைய வகுப்புத் தோழர் அரசியல் தலைவர் மருத்துவர் ராமதாஸ் .அந்த நட்பே மக்கள் தொலைக்காட்சியில் தெய்வநாயகம் அவர்கள் மருத்துவ நேரம் நிகழ்ச்சியினை  தொடர்ந்து நடத்தி அனைத்து மக்களையும் அவர் சென்றடைய வழிவகுத்தது.
 
ரஜினியுடன் ஒப்பிட முக்கியக் காரணங்கள்:
 உடல் நலம் குன்றும் முன்பு வரை அவரின் நடை மிகப் பிரசித்தம். அவ்வளவு வேகமாக இரு கைகளையும் வீசி நடந்தால் புயல் கடந்தது போல இருக்கும்,அதுவும் தி .நகரில் உள்ள நடேசன் பூங்காவில் அதிகாலை நான்கு மணிக்கு நடைபயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அவர் "உடம்பை வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே"   என்ற திருமூலரின் வாக்குப் படி உணவுப் பழக்க வழக்கம் ,உடற் பயிற்சி என்றவற்றை மிகத் தவறாமல் கடைப்பிடித்து வந்தார்.

ரஜினியின் பஞ்ச் வசனம் எவ்வளவு புகழ் பெற்றதோ எந்தளவு மறக்க முடியாதோ அந்தளவு நமது மருத்துவரின்  ஒவ்வொரு பேச்சும் மறக்க முடியாத அளவு மிகத்  தெளிவாகவும் கேட்பவர் தன வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு கூறுவார். இதனை அவரிடம் படித்த  மாணவர்களும் ,அவருடைய நோயாளிகளும் நன்கு அறிவர்.
கடமையில் அவருடைய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் பார்க்கவரை  வியக்கவைக்கும்.

அதற்கு  இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் கூறலாம். ஆண்டும் ,குடியரசுத் தலைவரின் பெயரும் நினைவில்  இல்லை ,ஆனால் இது நடந்து சென்னை மருத்துவக் கல்லூரியில்  சென்னை வந்த குடியரசுத் தலைவரை பொது மருத்துவமனையில்  நமது மருத்துவரிடம் அழைத்து வந்தபோது  அவரிடம் நோயாளருக்கான சீட்டினைக் (Out patient reciept ) கேட்டவுடன் உடன் இருந்த அரசு அதிகாரிகள் மிரண்டு விட்டனர். ஆனால் பிடிவாதமாக அந்த சீட்டு வந்தவுடன்தான் மருத்துவம் பார்த்தார்.

இன்னொரு சம்பவம் தாம்பரத்தில் நெஞ்சக நோய் கண்காணிப்பாளராக இருந்தபோது அங்கு மருத்துவ சோதனைக்காக வந்த சுகாதாரச் செயலரை மற்ற நோயாளிகளுடன் வரிசையில் வரச் சொல்லி மருத்துவம் பார்த்தார் .தன்  குடும்ப உறுப்பினர்களுக்கும் இதே நிலை தான் இவருடைய மனைவி ஒரு    முறை மருத்துவமனைக்கு வந்த போதும் இதே நிலைதான். இவற்றை எல்லாம் செய்யும் தைரியம் இருப்பது அவரிடம் இருந்த திறமைதான் முக்கியக் காரணம்.
            http://www.thehindu.com/multimedia/dynamic/01273/Chest_1273633f.jpg
சித்த மருத்துவத்தில் புரட்சி :
உயிர்க்கொல்லி நோய் (AIDS ) உச்சத்தில் காலகட்டத்தில் அவற்றுக்கான தீர்வினை தேடிகொண்டிருந்தபோழுது தனக்குத் தெரிந்த சித்த மருத்துவர்கள் மூலம் சித்த மருத்துவத்தில் அதற்கான தீர்வு ஓரளவு உண்டு என்பதனை உணர்ந்து அலோபதி மருந்துகளுடன் சித்த மருந்துகளையும் வழங்கி கூட்டு மருத்துவ சிகிச்சியினை தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ சிகிச்சையின் முடிவுகளை தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச மருத்துவ நாட்டில் சமர்ப்பித்து சர்வதேச மருத்துவ உலகில்  சித்த மருத்துவத்தைக் கவனிக்கச் செய்தார். சித்த மருந்துகளில் மட்டுமின்றி சித்த மருத்துவ நோய்  கணிப்பு முறைகளின்  மீதும் நம்பிக்கை வைத்து சித்த மருத்துவர்களே நடைமுறைபடுத்த முயற்சிக்காத நீர்க்குறி பரிசொதனையினை தவறாமல் ஒவ்வொரு நோயருக்கும் செய்து  அத்னான் படி மருந்துகள் வழங்கினார்.இது மட்டுமன்றி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில்  பொறுப்பு மிக்க பல பதவிகளில் இருந்த பொழுது அந்த நிறுவனத்தினை அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்  கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான  திட்டத்தினை தொடக்கி வைத்ததில் முக்கியப் பங்கு வகித்தார்.

தமிழ் தேசிய அரசியலில் கவனம்;
நிறையபேருக்கு  தெரியாத உண்மை இவருடைய தாத்தா நீதிக் கட்சியில் முக்கியப் பங்கு வகித்தவர் ,எனவே தனது  தாத்தா வழியில் இவரும் தமிழ் தேசிய அரசியலில் பங்கு வகிக்கத்  தொடங்கினார். இதனால் வேட்டி  சட்டை அணிவதையும் தூய தமிழில் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். தமிழ் மொழி தொடர்ப்பான கூட்டங்களுக்காக  தி.நகரில் உள்ள தனது  பள்ளியில் இலவசமாக  இடம் வழங்கினார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் தமிழ் மொழி வளர்ச்சிக்கான கூட்டங்கள் நடத்தி பலதுறை வல்லுனர்களை அழைத்து வந்து சிறப்பித்தார்.
மருத்துவரை  பற்றிக் கூற  இதைப் போன்ற செய்திகள் எண்ணற்றவை இருந்தாலும் மேற்குறிப்பிட்ட முக்கிய நிகழ்வுகள் மூலம் அவரின் சேவை எத்தகைய உன்னதம் வாய்ந்தது என்பதனை உணர்ந்திருப்பீர்கள்  என்று நம்புகின்றேன்.

இவரின் இழப்பு மருத்துவ துறைக்கு மட்டுமன்றி தமிழ் மண்ணுக்கும் தாயகத்துக்கும் ஏற்பட்ட பேரிழப்பு . இத்தகைய  பெருமை வாய்ந்த ஒருவரை சந்தித்ததையும் பழகியதையும் நினைத்தால் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கின்றது. தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நமது மருத்துவ செம்மலின்  சேவையை நினைவுகூர்தல் கடமையாகும்.

                                              

No comments: