Thursday, January 14, 2016

தங்கமகன் படத்தில் என்னைக் கவர்ந்த ஒரே அம்சம்:


தங்கமகன் வெற்றிப் படமா அல்லது தோல்விப் படமா என்று இந்தப் பதிவில் அலசி ஆராயப் போவதில்லை .அதை எல்லாம் தாண்டி அதி முக்கிய அம்சம் ஒன்றைப் பற்றி படத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். அது குறித்த விழிப்புணர்வு பதிவு. பலராலும் கே.எஸ் .ரவிகுமார் அவர்களின் நடிப்பு இந்தப் படத்தில் பாராட்டப்பட்டிருக்கின்றது. அவர் ஏற்றிருந்த ஞாபக மறதி குறித்து தான் இந்தப் பதிவு.முன்பே பல பதிவுகளில் நான் குறிப்பிட்டிருந்தது போல நான் மூளை ஆராய்ச்சியில்  கடந்த ஐந்து  வருடங்களாக ஈடுபட்டிருப்பதால் இந்தப் பதிவினை எழுத தூண்டியது. முதுமையில் அதிகம் அவதிப்பட வைக்கும் Dementia என்றழைக்கப்படும் இந்த ஞாபக மறதி நோயின் குறிகுணங்கள் நாற்பது வயதிலயே  தென்படுகின்றன.கடந்த பத்து வருடங்களாக நடைபெற்று வரும் ஆரய்ச்ச்சிகளின் விளைவாக இந்த நோயின் குறிகுணங்கள் தெரிய ஆரம்பிக்கும் நாற்பது வயதிலிருந்தே சிகிச்சை அளிப்பதன் மூலம் முதுமையில் இதன் கொடூரமான பாதிப்புகளிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

ஞாபக மறதி என்றழைக்கப்பட்டாலும் இதில் நம் செய்கைகளை மறப்பதோடு மட்டுமன்றி மொழி தடுமாற்றம் (பேசுவதில் கோளாறு ) , கண் பார்வை கோளாறு போன்ற பலவற்றை உள்ளடக்கிய ஒன்று.மறதியே முக்கிய அம்சமாக இருப்பதற்கான காரணம் நம் அன்றாட வாழ்க்கையில் சரிவர ஈடுபட முடியாமல் செய்யும் திறன்  கொண்டிருப்பதுதான். உ-ம் .நம் பணியில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு நம்மை தகுதியற்ற நபராக மாற்றிவிடும் . (தங்கமகன் படத்தில் கே எஸ் ரவிக்குமாருக்கும் இதே தான் நிகழும் )

கீழே உள்ள புகைப்படத்தினைப் பார்த்தால் இந்த நோயே வயதானவர்களுக்கு அதிகம் ஏற்படக்கூடிய ஒன்றாக இருப்பதினை தெரிந்து கொள்ள முடியும்.(Dementia )
வயதான காலத்தில் வரும் இருதய நோய், மூட்டு நோய் போல இந்த மூளை தொடர்பான நோயும் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நன்கு கல்வியறிவு பெற்ற சமூகமாக மாறி வரும் சூழலில் இது போன்ற நோய்களை வருமுன் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் அறிந்து வைத்திருத்தல் மிக அவசியமான ஒன்று. இதன் மூலம் முதுமையில் மற்றவர்களின் துணையின்றி மிக மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ முடியும் .

தீர்வு :
1.உடற்பயிற்சி: 10-30 நிமிடங்கள் மிக லகுவான உடற்பயிற்சி உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நல்லது . 

2. காலை உணவு : மூளைத் தேய்மானம் (neurodegeneration ) தடுக்க மிக சிறந்த வழி காலை உணவினைத் தவறாமல் எடுத்துக் கொள்வதுதான். பெரும்பலானோர் மிக அலட்சியமாக காலை உணவினை தவிர்க்கின்றனர். இரவு உணவுக்குப் பின்னர் ஏற்படும் நீண்ட இடைவெளியினால் மூளைக்குத் தகுந்த ஆற்றல் இல்லாமல் இருக்கும் . காலை உணவே அதை தகுந்த இடைவெளியில் மிக சரியாக ஈடுகட்டும். வழக்கமான இட்லி தோசை போனவற்றை உண்ண முடியாமல் போனாலும் பழம், பிரட் , பிஸ்கட் போன்றவற்றையாவது உண்ணுங்கள் .

3.மிக எளிமையான வழி : உங்கள் கைபேசியில் இருக்கும் androidல் உள்ள lumosityஐ பதிவிறக்கம் செய்து தினமும் சிலமணித்துளிகள் செலவிட்டால் நம் மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்க உதவும். (இது மட்டுமன்றி fitbrains app கூட சிறப்பான ஒன்று )-இரண்டுமே இலவச applications .4. உணவுவகைகளில் அதிகம் கீரை சேர்த்துக் கொள்ளலாம் .குறிப்பாக வல்லாரை மற்றும் பிரம்மி. (வல்லாரை மாத்திரைகளை நீங்களாகவே கடையில் வாங்கி பயன்படுத்தாதீர்கள் -சித்த மருத்துவரான எனக்கு நன்கு தெரியும் பல போலி வல்லாரை மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன.)
அனைவரும் நான் மேற்கூறிய இந்த செய்தி குறித்து அதிகம் கவனம் செலுத்தி உங்கள் மூளையினை பாதுகாத்துக் கொள்ளுங்கள் 

தமிழ் உறவுகளுக்கு என் இனியப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 


நன்றி 
செங்ககதிரோன் 

No comments: