Pictures of Gourmet Food

Friday, April 29, 2016

நடிகர் சங்கத் தேர்தல் ஒரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்:

காதல் பிரச்சனை , சொத்து பிரச்சனை , வாரிசு பிரச்சனை ,பங்காளி பிரச்சனை என ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு சேர்த்து நடந்த தேர்தல் தான் நடிகர் சங்கத் தேர்தல். ஊர் ரெண்டு பட்டாக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற பழமொழி தலைகீழாகி கூத்தாடிகள் ரெண்டு பட்டா ஊருக்கேக் கொண்டாட்டம் என்ற நிலையாக தேர்தல் முடியும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் சொந்தப் பிரச்சனையை மறந்து நடிகர் சங்கப் பிரச்சனையில் மூழ்கிவிட்டனர்.

காலையில் ஒரு குழு மற்றோருக் குழுவைத் திட்ட மாலையில் அந்தக் குழு  அவர்களை பதிலுக்குத் திட்ட , மக்கள் இவை இரண்டையும் கண்டு களித்தனர்.இந்த முழுப் பிரச்சனைக்கும் மூலக் காரணமாக சொல்லப்பட்ட நபர் வரலட்சுமி சரத்குமார்.என்னதான் வண்டு முருகன் தொடந்து இதற்காகப் போராடி வந்தாலும் விஷால் களத்தில் குதித்த பிறகு தான் இந்த தேர்தல் வேகம் பிடித்தது.


வரலட்சுமிக்காக ஏன் விஷால் இறங்கினர் என்பதனை ஒரு கற்பனைக் கதை மூலம் பார்ப்போம்:
 தன அப்பா சரத்குமாருடன் ராதிகா வீட்டில் வசித்து வந்த வரலட்சுமி ஒரு நாள்  இரவு தன்  அறையில் படு சத்தமாகப் பாட்டைப் போட்டு நடனம் ஆட , ராதிகாவின் மகள் ரேயான் கோபமாகி அவரைப் பாட்டை நிறுத்த சொல்கிறார்.  அதிக சத்தத்தினால் தன் தோழியுடன் தொலைபேசியில் பேச முடியவில்லை என்று அவர் கோபப்பட இருவருக்கும் தகராறு அதிகமாக ,அந்த நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து அசதியாக வந்த ராதிகா, தாய் பாசத்தினால் ரேயானுக்கு பரிந்து பேச சண்டை ராதிகாவுக்கும் வரலட்சுமிக்கும் முற்ற , ஒரு கட்டத்தில் வரலட்சுமியிடம் என் வீட்டை விட்டு வெளியே போ என்கின்றார்.  அழுது கொண்டே அணிந்திருந்த இரவு உடையுடன் வெளியேறுகின்றார், தன் சோகத்தைப் பகிர்ந்து கொள்ள நண்பன் விஷாலைத் தேடி செல்கின்றார். தன் ஆருயிர் தோழியின் அழுகையின் காரணம்தெரிந்தவுடன்  விஷால் துடிதுடித்துப் போகின்றார். இருப்பினும் அவர் தந்தை சரத்திடம் முறையிடச் சொல்கின்றார் . ஆனால் சரத்தோ இந்தப் பிரச்சனை குறித்து ராதிகா மூலம் முன்பே அறிந்திருந்ததால் தன அன்பு மகளையே கண்டிக்கின்றார். இதனைக் கேட்ட விஷால் கோபத்தின் உச்சிக்கே சென்று இவர்களின் கொட்டத்தை நான் அடக்குகின்றேன் என்று சபதம் எடுக்கின்றார் . அதனால் இதனை பாஞ்சாலி சபதம் போல் வரலட்சுமி சபதம் என்று கூறலாம்.(இந்தக் கதை புனைவாக இருந்தாலும் உண்மையாக நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று உங்களுக்கும் தெரியும் )

பலிகடா சிம்பு:
இந்த நடிகர் சங்க விவகாரத்தில் பலிகடா ஆனது நம்ம சிம்பு தான் , ஏக வசனத்தில் எதிரணியினரைத் திட்டி தன்னை தரம் தாழ்த்திக் கொண்டதோடு மட்டுமன்றி , தேர்தலிலும் தோற்று பரிதாப நிலைக்குப் போனார்.

ரெண்டுகெட்டான் பாக்யராஜ் :
அடுத்து பாக்யராஜ் , முதல் நாள் பாண்டவர் அணி கூட்டத்தில் கலந்து கொண்டவர் , அடுத்த நாள் ராதிகாவுடன் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் உட்கார்ந்திருந்ததை பார்த்து அவர் குடுமபம் மட்டுமல்ல , தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுமே அதிர்ச்சி அடைந்தனர்.

என்னடா நடக்குது:
ஆச்சர்யமூட்டும் செய்தி ஒன்று என்னவென்றால் கஸ்தூரி ராஜா இயக்கி பல ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் படத்தின் நாயகன் உதயா இந்தத் தேர்தலில் போட்டியிட்டது தான். இவர் இயக்குனர் ஏ.எல் .விஜயின் சகோதரர். சினிமாவிலே நடிக்காத ஒருவர் எப்படி நடிகர் சங்கத்தில் போட்டியிட்டார்  என்று தெரியவில்லை. வெற்றியும் பெற்றார் என்பதுதான் காலக் கொடுமை.

மோசமானவங்களிலேயே முக்கியமானவங்க இவுங்க :
தொலைக்காட்சிகளில் தேர்தல் குறித்த விவாதங்களில் அரசியல் வாதிகளின் சண்டையை மிஞ்சும் அளவுக்கு இவர்களின் சண்டை மிக மிக தரம் தாழ்ந்ததாக இருந்ததைப் பார்த்தவர்கள் அரசியல்வாதிகளின் அருமையை உணர்ந்தனர்.


தொடரும் பெயர் அரசியல் :
நடிகர் சங்கத்தின் பெயர் மீண்டும் அரசியலானது. ரஜினி தமிழ் நடிகர் சங்கம் என்று சொல்ல , கமல் உலக நாயகன் என்பதால் உலக நடிகர் சங்கம் என்று சொல்ல , நம்ம தல கவுண்டமணி நடிகர் சங்கம் என்று பெயர் வையுங்கள் என்று  கூறி எல்லோரையும் ஆப் ஆக்கினார். இருப்பினும் வெற்றி பெற்ற பிறகு பொருளார் கார்த்தி . பெயர் மாற்றுவதை  (தமிழ் -தெலுங்கில் நடிப்பதாலோ என்னவோ) விட ஏகபப்ட்ட வேலைகள் உள்ளன என்று கூறி அந்த பிரச்சனையினை திசை திருப்பினார். குழந்தை பிறந்தால் பெயர் வைப்பது தான் முதலில் நடக்கும், அதன் பிறகு தான் மற்றவை. பிற மாநிலங்களில் அந்த அந்த மொழிகளைக் கொண்டு பெயர் இருக்க இங்கு மட்டும் ஏன் தென்னிந்திய என்ற பெயர் இருக்க வேண்டும் ? தெலுங்கர்களுக்கு எதிராகக் கம்பு சுற்றும் சீமான் தான் சார்ந்த துறையில் நடக்கும் இந்த அநீதிக்கு எதிராக வாய் திறக்க மறுப்பது ஏன்? 

தூக்கி அடீச்சுடுவன் பாத்துக்க ராதாரவி:

ராதாரவி பற்றிக் கூறாமல் நடிகர் சங்க வரலாறே இல்லை . நடிகர் சங்கத்தைப் பல காலம் பராமரித்து வந்தவர் , இடையில் கொஞ்சம் நிலை தடுமாற அவரின் பங்களிப்பு எல்லாம் வீணாகி அவர் செய்த கெட்டவைகள் அவரை நடிகர் சங்கத்தை விட்டுக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி விட்டு விட்டது என்றே சொல்லாம் .தவளையும் தன் வாயால் கெடும் என்றப் பழமொழி இவருக்கு நன்கு பொருந்தும்.

உண்மையான தருமர்: 
பாண்டவர்களில் தருமர் எவ்வளவு நல்லவரோ அவரை விட நல்லவரான நடிகர் சங்கத் தலைவர் நாசர் தான் பாவம் , இவரின் நண்பர்  பத்திரிக்கையாளர் ஞானி சொன்னது போல அப்பழுக்கற்ற மனிதரான இவர் ,கமலின் அன்புக் கட்டளைக்குப் பணிந்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றார் . நடிகர் சங்கத்திற்கு இதுவரை தலைவர்களாக இருந்தவர்களிலேயே இவர் தான் மிக மிக பொருத்தமானவர். 

தமிழ் நாட்டில் நடந்த எல்லாத் தேர்தல்களையும் விட  ,இந்த நடிகர் சங்கத்  தேர்தல் குறித்து  மட்டும் தான் அனைத்து ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிக கவனம் பெற்ற ஒரு தேர்தலாக இருந்தது.


அடுத்து தமிழ் நாடே காத்திருப்பது எதற்காகவென்றால் , நடிகர் சங்கக் கட்டடம் கட்டி அதில் விஷாலுக்கு வரலட்சுமிக்கும் திருமணம் நடக்கையில் இதயம் இனித்தது, கண்கள் பனித்தன என்று விஷாலும் சரத்தும் இணைவதைப் பார்ப்பதற்காக தான் என்றால் மிகையில்லை.

முழுப்பதிவையும் பொறுமையாகப் படித்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே 

செங்கதிரோன் 

No comments: