Saturday, May 7, 2016

செல்லாக் காசாகிப் போன தமிழ் தேசியவாதிகள்:

தமிழ் சான்றோர் பேரவை என்ற ஒரு அமைப்பு ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மிக வலுவாக இருந்தது. அப்பொழுது கல்லூரியில் என்னுடைய மூத்த மாணவருடன் சேர்ந்து அந்தக் கூட்டங்களுக்கு செலவதுண்டு. அங்கே தான் சுவீ,நெடுமாறன் , பழ கருப்பையா , தியாகு ஆகியோரின் உரைகளைக் கேட்டேன். 


இவர்களையும் தவிர்த்து பல தமிழறிஞர்கள் அங்கே சங்கமமாவதுண்டு.தமிழின் தொன்மை குறித்த பல செறிவு மிக்க உரைகளை அங்கே கேட்க முடிந்தது.சென்னையில் இயங்கி வரும் மாணவர் நகலகம் (student  xerox ) நிறுவனத்தின் உரிமையாளர் நந்தன் அவர்களின் உதவியால் தமிழ் சான்றோர் பேரவை அமைப்பு பல விழாக்களை நடத்தியது.

நந்தன்

தமிழ் சார்ந்த பல்வேறு இசை,நாடிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அனைத்துத் தமிழ் தேசியவாதிகளும் அந்த அமைப்பில் ஒற்றுமையாக இணைந்து அரசியல் சாராமல் அவ்வியக்கத்தை நன்முறையில் நடத்தி வந்தனர்.தமிழ் மொழி வளர்ச்சி குறித்தும் தமிழர்களின் முன்னேற்றம் குறித்தும் நடக்கும் இக்கூட்டங்களுக்கு காவல் துறை கடுமையானக்  கட்டுப்பாடுகளை விதிப்பது மட்டுமன்றி, உளவுத்துறை காவல் அதிகாரிகள் தவறாமல் கலந்து கொண்டு கூட்ட நிகழ்வுகளைக் குறிப்பெடுப்பார்கள்.

அரசியல் சாராது நடந்த இவ்வியக்கத்தில் அரசியல் புகுந்தவுடன் ஆமை புகுந்த வீடாக மாறி இவ்வமைப்பின் வீழ்ச்சி தொடங்கியது.பின்னர் தான் நெடுமாறன் ,சுப வீ, தியாகு , மணியரசன் என ஒவ்வொருவரும் தனித்தனி இயக்கம் தொடங்கினார்கள். நெடுமாறன் சசிகலா கணவர் நடராசன் நிழலிலும் , சுப வீ திமுவின் நிழலிலும் , தியாகு ஈழத்தமிழ் ஆதரவு அமைப்பிலும் மற்றும் பழ கருப்பையா அதிமுகவிலும் இணைந்தனர்.இதனால் இவர்கள் முன்னெடுத்த தமிழ் தேசியக் கனவுக்கு இவர்களே முற்றுப்புள்ளி வைத்தனர். 

திராவிட நாடு என்ற கொள்கையின் அடிப்படையே தமிழ்க்குடும்ப மொழிகளான தெலுங்கு, மலையாளம் , கன்னடம் இவற்றை பேசும் மக்களை உள்ளடக்கி உண்டாக்க முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தனர். இந்தக் கருத்தை ஒட்டியே கருணாநிதியும் இந்த நான்கு மாநிலங்களையும் இணைத்து ஒரு கூட்டமைப்பினை குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த சமயத்தில் அந்த மாநிலங்களில் தேசியக் கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருந்த காரணத்தினாலும் , இந்தக் கூட்டமைப்பு தேச விரோத செயல் என்று ஒரு பரப்புரை மேற்கொள்ளப்பட்டதாலும் அம்முயற்சி தோல்வி அடைந்தது.இந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால்  இந்த நான்கு மாநிலகளிக்கிடையேயான நதி நீர் பிரச்சனையை நாமே தீர்த்துக் கொண்டிருக்க முடியும். மேலும் திராவிடத் தொன்மை குறித்த ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தினை அமைத்து கூட்டாக ஆராய்ச்சி செய்திருக்க முடியும். மேலும் இந்தி மொழியின் ஆதிக்கம் குறித்து நாம் நடத்தியப் போராட்டத்திற்கு அண்டை மாநிலங்களின் துணை இல்லாததாலும் அவர்கள் இந்தியினை ஏற்றுக் கொண்டதாலும் நாம் மட்டுமே இந்திக்கு எதிரானவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டது.

இனம் மற்றும் மொழி பேசுபவர்களின் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு , பிரெஞ்சு மொழிப் பேசும் மக்களின் கூட்டமைப்பு போன்றவை மிக வலுவாக செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். அது போன்ற வெற்றிகரமான அமைப்பாக இந்த திராவிட கூட்டமைப்பு செயல்பட்டுக்கொண்டிருந்திருக்கும். ஆனால் இந்திய தேசியத்தின் சூழ்ச்சியாலும் தமிழகத்திலே உள்ள புல்லுருவிகளாலும் தான் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

திமுக திராவிடக் கொள்கைகளை கொஞ்சமேனும் செய்து வந்த நேரத்தில் தான் அதிமுக தோன்றியது. அண்ணா பெயரில் தொடங்கிய கட்சி முழுக்க முழுக்க திராவிடக் கொள்கைகளை தோண்டிப் புதைத்து விட்டு மக்கள் நலன் சார்ந்த அரசாக செயல்படத் தொடங்கியது. இனம் மொழி என்பதை விட மக்களை வறுமையில் இருந்து மீடப்தே விட மக்கள் நலனே முக்கியம் என்று செயல் பட்டார். இந்த முயற்சிக்கு அதிக வரவேற்பு இருந்த காரணத்தினால் தான் அடுத்து வந்த திமுக அரசும் கொள்கைகளை பரணில் தூக்கி வைத்து விட்டு இலவசங்களை வாரி வழங்கி மக்களை ஈர்ப்பதை மட்டுமே நோக்கமாக செயல்படத் தொடங்கியது.

 இவ்வாறு திராவிடம் தங்கள் வகுத்த பாதையில் இருந்து வழுவிய சமயத்தில் தான் தமிழ் தேசியக் கொள்கைகள் கொஞ்சம் வலுப்பெறத் தொடங்கின. கார்ட்டூனிஸ்ட் பாலா குறித்த பதிவிலே குறிபிட்டது போல திராவிடக் கட்சிகள் ஈழப் பிரச்சனை குறித்து எந்த வித முயற்சியினையும் எடுக்காத காரணத்தினால் , ஈழப் பிரச்சனை ஒன்றையே மையப்படுத்தி தமிழ் தேசியக் கட்சிகள் வளர ஆரம்பித்தன.

தற்பொழுது இயங்கி வரும் தமிழ் தேசிய இயக்கங்கள்,  திராவிடக் கட்சிகள் தமிழ் வளர்ச்சியிலும், தமிழர் முன்னேற்றத்திலும் துரோகங்கள் செய்து விட்டதாகக் கூறி வருகின்றனர். ஆனால் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து வருவதில் தமிழகமே இந்தியாவில் முதலிடடத்தில் இருக்கின்றது என்பதனை திராவிடக் கொள்கைக்கு எதிரானவர்களும் ஒப்புக் கொள்கையில் இந்த தமிழ் தேசியவாதிகள் அதனை மறைத்து இளைஞர்களை தவறாக வழி நடத்துகின்றனர்.

திராவிடமே  இந்திய தேசியத்துக்கு கடும் அச்சுத்தலான ஒன்றாகவே பார்க்கப்பட்டது , அப்படி இருக்கையில் தமிழ் தேசியம் என்பதனை தீவிரவாத அமைப்பாகத்  தான்  இந்திய அரசு பார்க்கும் , எனவே இந்த இயக்கங்களில் இணையும் மூளை சலவை செய்யபட்ட இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே இருக்கும்.

அதற்காகப் பயந்து பதுங்க வேண்டியதில்லை. பல  தொன்மை மிக்க இந்த தமிழின் அருமை பெருமை குறித்து பல குறும்படங்களை இயக்கி குழந்தைகளுக்கு தமிழ் குறித்து சிறப்புகளைப்  புரிய வைக்க வேண்டும். பாரம்பரிய தமிழ் கலைகளை உலகம் முழுதும் கொண்டு செல்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.இது போன்ற பல முயற்சிகளின் மூலம் தான் நம் வருகாலத் தலைமுறைக்கு தமிழ் குறித்த ஒரு பெருமித உணர்வு ஏற்படும்

இந்தப் பதிவின் மூலம் சொல்ல விழைவது என்னவென்றால் தெளிவில்லாக் கொள்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழ் தேசிய இயக்கங்கள் காலப் போக்கில் செல்லாக் காசுகளாக மாறிவிட்டதனை குறிப்பிட்டிருக்கின்றேன். 

நேரம் கிடைக்கும்போது இது தொடர்பான மற்ற செய்திகள் குறித்து எழுதுகின்றேன். குறிப்பாக தமிழ் தேசியவாதிகளை உசுப்பேற்றி தமிழினத்தை வீழ்த்த நினைக்கும் விஷமிகள் குறித்தும் , கருணாநிதியின் சுயநலம்  எவ்வாறு திராவிடக் கொளகைகளை நீர்த்துப் போக செய்தது குறித்தும் இதே தலைப்பில் எழுதுகின்றேன் .

நன்றி 
செங்கதிரோன் 
No comments: