Thursday, January 26, 2017

நெல்லிக்கனி :ஒளவையார் காலம் முதல் இன்று வரை


தருமபுரியை ஆண்ட மன்னன் அதியமான் தன்னிடம் இருந்த நெல்லிக்கனியினை தமிழுக்கு தொண்டாற்றும் ஒளவையார்  நீண்ட நாள் வாழ்வதற்காக வழங்கினான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த கதை.ஆனால்  அதியமான் வாழ்ந்த காலத்தில் ஏகப்பட்ட பழங்கள் இருக்க ஏன் நெல்லிக்கனியினை ஒளவைக்கு வழங்கினான் என்பதற்கு காரணம்  நம் சித்தர்கள் காயகற்பத்தில் அதனை முதன்மையான ஒன்றாக வைத்திருந்ததேயாகும். அதியமான்-ஒளவையார் இடையே நடந்த இந்த நிகழ்வின் மூலம் அதியமானின் வள்ளல் தன்மை , ஒளவையின் தமிழ் பற்று என்ற இரண்டை மட்டுமே இன்றும் தமிழ் சமூகம் கொண்டாடும் வேளையில் சித்த மருத்துவர்களாகிய நாம் இந்த வரலாற்று நிகழ்வில் நெல்லிக்கனியின் முக்கியத்துவமும் மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கின்றது என்ற உண்மையினையும் எடுத்துரைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
நெல்லிக்கனி குறித்து நவீன அறிவியல் துணை கொண்டு நடத்திய ஆய்வு முடிவுகளும் ஆச்சரியமூட்டும் வகையில் சித்தர்கள் சொன்ன அனைத்தும் உண்மை என்று எடுத்துரைக்கின்றன. மிக குறிப்பாக இரண்டு மதத்திற்கு முன் வந்த ஒரு அறிவியல் கட்டுரை நெல்லிக்கனி குறித்து இதுவரை நடைபெற்ற ஆய்வு முடிவுகள் குறித்து ஒரு தொகுப்பினை வெளியிட்டிருக்கின்றது.

நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிகம் நிரம்பியிருக்கின்றது என்பது தெரிந்த ஒன்று,மற்றோரு மூலக்கூறான கேலிக்அமிலம் (Gallic acid) தான் விட்டமின் சி யைவிட அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனென்றால் கேலிக் அமிலத்திற்கு Anti-inflammatory, Antioxidant, Anti-inflammatory, Anti-proliferative, Anti-cancer, Anti-diabetic, Cardio-protective, Neuroprotective, Antibacterial என்ற  பல்வேறு செயல்களை செய்கின்றது. இன்னும் விரிவாக பார்த்தோமானால் , திரிபலா சூரணத்தில் சேரும் மற்ற இரண்டு மூலிகைகளான கடுக்காய் , தான்றிக்காயினை விட நெல்லிக்காயில் மட்டுமே அதிக அளவு கேலிக் அமிலம் இருக்கின்றது. அதனால் தான் நெல்லிக்காயானது மற்ற மூலிகைகளை தாண்டி முக்கியத்துவம் பெறுகின்றது.

கீழ்க்கண்ட படத்தில் உள்ளது  போல் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சார்ந்து ஏற்படும் நோய்களை தீர்ப்பதில் நெல்லிக்காய் முக்கியபங்காற்றுகின்றது.மேற்சொன்ன ஆய்வுக்கட்டுரையில் நெல்லிக்கனியில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் நீரிழிவு , புற்று நோய் , மூளை தொடர்பான நோய்களில் செயலாற்றும் விதம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.கட்டுரையின் முடிவில் சொல்லப்பட்டுள்ள கருத்து தான் நெல்லிக்கனியின் நோய் தீர்க்கும் ஆற்றல் குறித்த கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது. அது என்னவென்றால் ஒரு துப்பாக்கி குண்டு மனிதனின் ஆயுளை போக்கும் ஆற்றல் வாய்ந்தது , அது போல தான் குண்டு வடிவத்தில் இருக்கும் ஒரு  நெல்லிக்கனிக்கு  மனிதனின் ஆயுளை நீட்டிக்க செல்லும் அளவுக்கான சிறப்பு கொண்டது என்று முடித்துள்ளனர்.

மேற்சொன்ன செய்திகளிலிருந்து ஒளவையார் காலம் முதல் இன்று வரை நெல்லிக்கனியானது அதன் தன்மையினை இழக்காமல் மக்களுக்கு நன்மை அளித்து வருகின்றது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.

References:
1.     Emblica officinalis (Amla): A review for its phytochemistry, ethnomedicinal uses and medicinal potentials with respect to molecular mechanisms. Pharamcology research.2016, Sept.

கனடாவில் வசித்து வரும் மூளை  நோய்கள் குறித்த ஆராய்ச்சியாளர்

Dr. செந்தில் கிருஷ்ணசாமி PhD (Neuroscience)  அவர்களால்  எழுதப்பட்ட இந்த கட்டுரையை அவரின் அனுமதியுடன் இங்கு பகிர்கின்றேன்.

நன்றி 
செங்கதிரோன்