Thursday, January 26, 2017

முருங்கை குறித்த பாக்யராஜ் சொன்னது உண்மையா?

1983ல் வெளிவந்த முந்தானை முடிச்சு படத்தில் முருங்கை ஆணின் உடலை முறுக்கேற்றும் என்ற கருத்தினை பாக்யராஜ் சொல்ல அது  மிக பிரபலமானது. மீண்டும் அதே கருத்தினை 2013ல் வெளிவந்த உத்தம புத்திரன் படத்திலும் பாக்யராஜ் அதே கருத்தினை கூறுகின்றார். இந்த நவீன  யுகத்திலும் அவர் இந்த கருத்தினை சொல்லும்போது அதன் பிண்ணனி குறித்தும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது . முருங்கையின் பயன் என்பது ஆணுக்காக மட்டுமல்லாமல் அனவைருக்கும் பலனளிக்கக்கூடிய முக்கிய மூலிகையாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது.

முருங்கை இந்தியா, இலங்கை மட்டுமன்றி ஆப்பிரிக்க  மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பரவலாக விளையும் மூலிகை. தமிழ் பாரம்பரியத்தில் முருங்கை முக்கிய உணவுப் பொருளாக இருக்கின்றது.  ஆபிரிக்காவில் முருங்கை மரத்தினை Miracle tree என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்த கட்டுரையில் முதலில்  சித்த  மருத்துவத்தில் முருங்கையின் பலன்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளவற்றையும்  , அடுத்து அறிவியல் ரீதியாக நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் கண்டறியப்பட்ட முருங்கையின் பலன்கள் மற்றும் கடைசியாக பாக்யராஜ் முருங்கை குறித்த சொன்ன கருத்தின் உண்மை தன்மை குறித்தும் பார்ப்போம்.

முருங்கை இலை மற்றும் காய் ஆகியவை சமைத்து சாப்பிட்டால்   சோர்வை நீக்கி புத்துணர்வினை உண்டு பண்ணும் என்று   கூறப்பட்டுள்ளது.மிக முக்கியாயமாக பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு மிக முக்கிய உணவாக இது செயல்படும்  , ஏனெனில் முருகைக்கு பால் சுரக்கும் தன்மை அதிகம் உண்டு , இதனால் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கின்றது.மேலும் சிறுவயது பிள்ளைகளுக்கு உண்டாகும் வயிற்று பூச்சி பிரச்ச்னைகளுக்கு முருங்கை இலை  நல்ல தீர்வாக  இருக்கும் என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடபப்ட்டுள்ளது.

முருங்கை மரத்தின் வேர்கள் வீக்கத்தை குறைக்கவும் , காயங்களுக்கு  மருந்தாகவும்  பயன்படுகின்றது. மேலும் காது மற்றும் பல்வலியினை குணபப்டுத்துவதில் முருங்கையின் வேர் உபயோகப்படுத்தப்படுகின்றது.முருங்கை மரத்தின் பட்டை பாம்புக்கடி  போன்ற நச்சுமுறிவு மருத்துவத்தில் நல்ல பலன் கொடுக்கும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.முருங்கைப்பிசினானது வயிறு தொடர்பான நோய்கள் , மூட்டுவலி மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகின்றது.

நவீன அறிவியல் அறிஞர்கள்  சித்த  மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றின் உண்மை தன்மை குறித்து உறுதிபடுத்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.முருங்கை குறித்து சித்த மருத்துவம் போன்றே  உலகம் முழுக்க உள்ள பரமப்ரிய மருத்துவ முறைகளில் சொல்லப்பட்டுள்ளவை குறித்த ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

பாரம்பரிய முறைகளில் முருங்கைக்கு தாய்மார்களுக்கு அதிக பால் சுரக்கும் தன்மை உடையது என்று கூறியிருப்பதை  நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டது . ஏனென்றால் முருங்கையில் பால் மற்றும் முட்டையில் இருப்பதை  விட அதிக அளவு கொண்ட புரதம் இருப்பதையும் மேலும் கால்சியம் அளவும் மிக அதிக அளவில் முருங்கை இலையில் இருப்பது கண்டறியபப்ட்டது..வைட்டமின் A ,B ,C மற்றும் E முருங்கையின் காய் மற்றும் இலையில் இருக்கின்றது , இதனால் கண்களுக்கு பாதுகாப்பினையும் , வைட்டமின் C குறைபாட்டினால் வரும் ஸகர்வி நோயினை தடுப்பதிலும் முக்கியபங்காற்றுகின்றது.

முருங்கையின் இலை மற்றும் காயினை (விதைகள்) பொடித்து எலிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் முருங்கை உடலில் உள்ள பலவேறு உறுப்புகள் தொடர்பான நோய்களை நீக்குவதில் சிறப்பாக செயல்படுகின்றது என்று கண்டறியப்பட்டது. 

மூளை : முருங்கை இலை மற்றும் விதைக்கு தூக்கமின்மையினை சரி செய்யும் ஆற்றல் உள்ளது கண்டுபிடித்துள்ளனர். மேலும்  வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோய்க்கு முருங்கை இலை பலனளிக்கும் என்பதனையும்  எலிகளில் நடத்திய சோதனையில் கண்டுபிடித்துள்ளனர்.

இருதயம்: இருதய நோய் உணடாவதற்கு முக்கியக் காரணமான கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் முருங்கையிலைக்கு உள்ளது.முக்கியமாக ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்புகளை அகற்றி ரத்த ஓட்டத்தை சரி செய்வதில் மற்ற கீரைகளை விட முருங்கை சிறப்பாக செயலாற்றுகின்றது.

நீரிழிவு: நவீன அறிவியல் ஆய்வுகள் நீரிழிவு நோயாளிகள் வாரம் இருமுறை முருங்கை கீரை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயின் தன்மை வெகுவாக சரி செய்யும் என்று பரிந்துரைக்கின்றனர்.

மேற்சொன்னவை மட்டுமல்லாமல்  சிறுநீரக கோளாறுகள் , தோல் நோய்கள் மற்றும் வயிறு தொடர்பான நோய்களை தீர்ப்பதில் முருங்கையின் பங்களிப்பு குறித்து பலவேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இறுதியாக பாக்யராஜ் முருங்கை ஆணின் உடலை முறுக்கேற்றும் என்று சொன்னது குறித்து பார்ப்போம். சித்த  மருத்துவத்தில் முருங்கைக்கு சோர்வை நீக்கி ஆற்றலை கொடுக்கும் தன்மை இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளதால் இது ஆண்களுக்கு  உடல் வலைமையினை அதிகரிக்கும் என்று புரிந்து கொள்ளலாம். நவீன அறிவியல் முருங்கை இலையில் உள்ள சப்போனின்களால் ஆண்களுக்கு தாம்பத்ய உறவில் அதிக விருப்பத்தினை உண்டாக்கும்  என்று உறுதிசெய்துள்ளது. மேலும் முருங்கை விதையில் உள்ள சத்துக்கள்  ஆண் பெண் இருவருக்குமே தாமபத்ய உறவில் ஈடுபடுவதற்கான நாட்டத்தினை பெருக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.

சித்தர்கள் முருங்கையினை அதன் பல தரப்பட்ட மருத்துவ செய்கைகளுக்காக  மகா மூலிகை என்றழைக்கின்றனர். நவீன மருத்துவ உலகம் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கும்  ஆற்றல் பெற்றிருப்பதால் அதிசயத்தக்க மரம் என்று குறிப்பிடுகின்றது. ஆண்கள் , பெண்கள் , குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனைவருக்கும்  பலனளிக்கக் கூடிய முருங்கையினை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு நோயில்லா வாழ்வினைப் பெறுவோம். 

கனடாவில் வசித்து வரும் மூளை  நோய்கள் குறித்த ஆராய்ச்சியாளர் Dr. செந்தில் கிருஷ்ணசாமி PhD (Neuroscience)  அவர்களால்  எழுதப்பட்ட இந்த கட்டுரையை அவரின்அனுமதியுடன் இங்கு பகிர்கின்றேன்.

நன்றி 
செங்கதிரோன்

 

No comments: